Published : 21 Mar 2025 02:16 PM
Last Updated : 21 Mar 2025 02:16 PM

“அதிமுக நீர்த்துப்போக சாணக்கிய தந்திரத்தோடு சிலர் கணக்குப் போடுகின்றனர்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் வேறு எங்கோ உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு சிலர் எங்கோ உட்கார்ந்து கொண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மடிக்கணினி அறிவிப்பு குறித்து அதிமுக உறுப்பினர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: “அதிமுக உறுப்பினர் தங்கமணி, கூட்டல் கழித்தல் கணக்கை இங்கே போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், உங்களுடைய கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து, அதிமுக தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு சிலர் எங்கோ உட்கார்ந்து கொண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்றுக் கவனக்குறைவாக இருந்துவிட்டதைப் போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கணத்தைப் பறிப்பதுக்கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். அதற்காக, 2,000 கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைவைத்து ஒரு கூட்டல் கணக்குப் போட்டுப்பார்த்தால், ஒரு லேப்டாப்-க்கு ரூ.10,000 தான் வருகிறது. இந்த பத்தாயிரம் ரூபாயில், எத்தகைய ஒரு மடிக்கணினியை வழங்க முடியும் என்று ஒரு மணக்கணக்கைப் போட்டு பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்த திட்டம் அறிவிக்கின்றபோது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால், அதற்கு முதற்கட்டமாக இந்தாண்டு 2,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. அப்படியென்றால், அடுத்தாண்டு இந்த திட்டத்துக்கு மேலும் இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இப்போது நீங்கள் அந்த கணக்கை கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்களுக்கு விடை தெரியும். எனவே, மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியை பயன்படுத்துகிற அளவுக்கு ஒரு தரமான மடிக்கணியை வழங்கிட இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது.

எனவே, தரம் குறித்த கவலை நிச்சயம் உறுப்பினர்களுக்குத் தேவையில்லை. எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினி ரூ.20,000 அளவில் இருக்கும். அதற்காக இந்த வருடம் ரூ.2,000 கோடி அந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x