Published : 21 Mar 2025 02:05 PM
Last Updated : 21 Mar 2025 02:05 PM
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாட்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 100 அடி சாலையில் மனோஜ் என்ற கஞ்சா வணிகர் கொடூரமான முறையில் ஓட, ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக சென்ற போது அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கிறது என்பதிலிருந்தே தமிழகத்தில் கொலையாளிகள் காவல்துறை மீது எந்த அளவுக்கு அச்சமின்றி துணிச்சலுடன் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
காரைக்குடி கொலை செய்தி குறித்த பதட்டம் தணியும் முன்பே திருத்தணி அருகே 19 வயது இளைஞர் உடலில் 15 இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தொலைக்காட்சிகளில் ஒரு தலைப்புச் செய்தி முடிந்து அடுத்தத் தலைப்புச் செய்தி வருவதற்குள் அடுத்தக் கொலை நடக்கும் அளவுக்கு கொலைகளின் எண்ணிக்கையும், வேகமும் அதிகரித்திருக்கிறது.
நெல்லையில் ஜாகிர் உசேன், ஈரோடு நசியனூரில் ஜான், காரைக்குரியில் மனோஜ் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாள்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் நிகழ்ந்த 3 கொடியக் கொலைகளையுமே காவல்துறையினர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்.
இவர்களில் ஜாகிர் உசேன் தமது உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடமே தெரிவித்திருந்தார். மற்ற இருவரும் குற்றப்ப்பின்னணி கொண்டவர்கள். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது காவல்துறையினருக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், அலட்சியமாக இருந்ததால் தான் இந்தப் படுகொலைகள் நடந்திருக்கின்றன.
ஜாகிர் உசேன், ஜான், மனோஜ் ஆகிய மூவரின் படுகொலைகளும் திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்த படுகொலைகள் அல்ல. இவை அனைத்தும் நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தான். இவற்றுக்காக பல நாள்கள் ஒத்திகையும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான திட்டங்கள் வகுக்கப்படும் போது அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவது தான் காவல்துறையின் பணி. ஆனால், அதில் கோட்டை விடும் காவல்துறை, கொலை நடந்த பிறகு குற்றவாளிகளை பிடித்து, அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு, குற்றவாளிகளை சுட்டுப் பிடித்து விட்டதாக சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. இது காவல்துறைக்கு அழகு அல்ல.
கொலை நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம், கடந்த ஆட்சியை விட எங்கள் ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றெல்லாம் கூறுவதன் மூலம் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் தவறியதை தமிழக அரசு நியாயப்படுத்த முடியாது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மோசமாக சீரழிந்து வருவதையே தினசரி கொலைகள் காட்டுகின்றன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் -ஒழுங்கைக் காக்கவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment