Last Updated : 21 Mar, 2025 10:26 AM

 

Published : 21 Mar 2025 10:26 AM
Last Updated : 21 Mar 2025 10:26 AM

பெண் என்பதால் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா? - அதிகாரிகளிடம் ஆவேசம் காட்டிய கடலூர் திமுக மேயர்

“நான் பெண்ணாக இருப்பதால் அதிகாரிகள் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா?” பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு இப்படிப் பொங்கி இருக்கிறார் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் சுந்தரி ராஜா. 2021-ல் மாநகராட்​சியாக தரம் உயர்த்​தப்பட்ட கடலூர் மாநகராட்​சியில் மொத்தம் 45 வார்டுகள்.

இதில் 31 வார்டுகளை தன் வசம் வைத்திருக்​கிறது திமுக. 5 வார்டுகளை திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்​னீர்​செல்வம் தனது விசுவாசியான சுந்தரி ராஜாவை மேயர் வேட்பாளராக நிறுத்​தி​னார்.

கோ.ஐயப்பன்

இவரை எதிர்த்து கடலூர் திமுக எம்எல்​ஏ-வான கோ.ஐயப்​பனின் விசுவாசியான கீதா குணசேகரனும் திமுக போட்டி வேட்பாளராக கோதாவில் குதித்​தார். முடிவில், சுந்தரி ராஜாவே மேயரா​னார். மேயர் தேர்தல் முடிந்த பிறகும் திமுக கோஷ்டி பூசல் அடங்க​வில்லை. ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்​பினர்கள் மேயர் சுந்தரி ராஜாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர்.

அவர்களை சமாளிக்க முடியாமல் மேயர் திணறி​னார். இதையடுத்து இருதரப்​பையும் அழைத்துப் பேசி மத்தி​யஸ்தம் செய்து அனுப்​பி​ வைத்தது திமுக தலைமை. அதன் பிறகு உட்கட்சி புகைச்சல் கொஞ்சம் அடங்கிய நிலையில், மேயருக்கும் மாநகராட்சி அதிகாரி​களுக்கும் முட்டிக் கொண்டது.

இந்த நிலையில், கடலூர் மஞ்சக்​குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்​பீட்டில் புதிய கடைகள் கட்டு​வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்​சிக்கு மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்​செல்வன் உள்ளிட்​ட​வர்கள் வந்திருந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் அந்தப் பக்கம் எட்டிக்​கூடப் பார்க்​க​வில்லை.

இதனால் கடுப்பான மேயர் சுந்தரி ராஜா, “மாநக​ராட்சி திட்டத்​துக்கு அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அதிகாரிகள் சொன்னதால் தான் நான் இங்கு வந்தேன். என்னை வரச் சொல்லி​விட்டு அதிகாரிகள் யாரும் வரவில்​லையா?” என்று அங்கிருந்த ஒப்பந்​த​தா​ரரிடம் சூடாக கேள்வி எழுப்​பி​னார்.

அதிகாரிகள் வரவில்லை என்றபோதும், “பணிகளை தொடங்க எவ்வித தடங்கலும் வரக்கூடாது என்பதற்காக நானே அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைக்கிறேன்” என்று சொல்லி​விட்டு அடிக்​கல்லை நாட்டினார் மேயர். எல்லாம் முடிந்த பிறகு மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அவர்களை பார்த்​ததும் ஒட்டுமொத்தக் கோபத்​தையும் கொட்டிய மேயர், “மாநக​ராட்சி சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்ப​தற்காக குறிப்​பிட்ட நேரத்தை தெரிவிக்​கிறீர்கள். நீங்கள் சொன்ன நேரத்​துக்கு நான் ஸ்பாட்​டுக்கு வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. பெண் மேயர் என்பதால் நான் கலந்து​கொள்ளும் நிகழ்ச்​சிகளை புறக்​கணிக்​கிறீர்​களா?” எனக் கொந்தளித்​தார்.

“இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கி​றோம்” என உதவி பொறியாளர் பாரதி அப்போதைக்கு சமாளித்​தா​லும், அதிகாரி​களுக்கு எதிராக மேயர் சுந்தரி ராஜா கோபப்பட்ட விவகாரம் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாக இருக்​கிறது.

இது குறித்து மேயர் சுந்தரி ராஜாவிடம் பேசினோம். அதிகாரிகள் மீதான ஆதங்கம் குறையாமல் பேசிய அவர், “மாநக​ராட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்​சிகளுக்கு அதிகாரிகள் எந்த நேரத்தைக் குறிப்​பிட்டுச் சொல்கி​றார்களோ அந்த நேரத்​துக்கு நான் தவறாமல் அந்த இடத்துக்குச் சென்று விடுகிறேன். ஆனால், அதிகாரிகள் அந்த நேரத்​துக்கு அங்கு வருவதில்லை. தாமதமாகத்தான் வருகி​றார்கள்.

ஒன்றல்ல... ரெண்டல்ல இதுவரைக்கும் 5 நிகழ்ச்​சிகளில் அதிகாரிகள் இப்படி நடந்திருக்​கி​றார்கள். மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்​கிறேன். ஆனால், அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்​கிறது” என்றார்.

டாக்டர் அனு

மேயர் கலந்து கொள்ளும் நிகழ்ச்​சிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் குறிப்​பிட்ட நேரத்​துக்குச் செல்லாமல் இருப்பது ஏன் என்று மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனுவிடம் கேட்டதற்கு, “ சின்ன மிஸ் அண்டர்​ஸ்​டாண்​டிங்ல அப்படி நடந்து​விட்டது. இனிமேல் இது சரிசெய்​யப்​படும்” என்றார். அதிகாரிகள் மீதான மேயரின் வருத்தம் குறித்து கடலூர் எம்எல்​ஏ-வான கோ.ஐயப்​பனிடம் கேட்டதற்கு, “இதுபற்றி நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்​ப​வில்லை” என்று முடித்துக் கொண்டார்.

“மேயர் நிகழ்ச்​சிகளுக்கு அதிகாரிகள் போறது இருக்​கட்​டும்... மாநகராட்​சியில் மேலாளர், செயற்​பொறி​யாளர், நகர்நல அலுவலர் உள்​ளிட்ட முக்கிய பதவிகள் காலியாவே இருக்கு. அதைக் கொஞ்சம் நிரப்பச் சொல்​லுங்க சார்” என்​கி​றார்கள் கடலூர் மாநக​ராட்சி மக்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x