Published : 20 Mar 2025 10:19 PM
Last Updated : 20 Mar 2025 10:19 PM
சென்னை: ‘அறம்’ திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
’அறம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோபி நயினார். அண்மையில் இவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் திமுக குறித்தும் கூட்டணி கட்சிகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிராக திமுக ஆதரவாளர்கள் பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை கோபி நயினார் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது.
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.
இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம். இந்தியா முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.
இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன். என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு” இவ்வாறு கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...