Published : 20 Mar 2025 06:26 PM
Last Updated : 20 Mar 2025 06:26 PM
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் இன்றைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். வேல்முருகன் தன்னை திருத்திக் கொள்ளுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான இன்று பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அதிமுக ஆட்சியில் ஒரு துறை சார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “வேல்முருகன் பொத்தாம் பொதுவாக பேசுகிறார். அவர் அவையில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அதனால் அவரது கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். அப்போது பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவையை நடத்தினார். இதற்கு பதில் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இருக்கையில் இருந்தவாறு வேல்முருகன் முறையிட்டார்.
ஆனால் விவாதம் நீள்கிறது, இன்னும் நிறையபேர் பேச வேண்டும் எனக் கூறி, மயிலாடுதுறை திமுக எம்.எல்.ஏ. நிவேதா முருகனை பேச அழைத்தார். அவரும் பேசத் தொடங்கினார். உடனே இருக்கையில் இருந்து எழுந்த வேல்முருகன், தனக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி சென்று கூச்சலிட்டார். உடனே பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கைக்கு வந்து அமர்ந்தார். வேல்முருகனை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்திய அப்பாவு, “அதிமுக ஆட்சி குறித்த வேல்முருகனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக” அறிவித்தார்.
ஆர்.பி.உதயகுமார் கருத்துக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்குமாறு வேல்முருகன் தொடர்ந்து கூச்சலிட்டார். அப்போது, “உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியுமா?” என அமைச்சர் சேகர்பாபு கூற, அவர் முன்பு சென்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சேகர்பாபுவுக்கு ஆதரவாக மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்கும்படி கோரிய பேரவைத் தலைவர் அப்பாவு, வேல்முருகனை இருக்கையில் அமரச் சொன்னார்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் எழுந்து, “பேரவைத் தலைவர் இருக்கை அருகில் வந்து மிரட்டும் தொனியில் பேசி, அவையை மீறிய செயலில் ஈடுபட்டது வேதனை அளிக்கிறது. அவை விதியை மீறி அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறார். அவையில் வேல்முருகன் கோபமாக பேசினாலும், அதில் குணம் இருக்கும் என்பதால் அவரது பேச்சை அமர்ந்து கேட்பேன். அவையில் கைநீட்டி கூச்சலிடுவது முறையற்ற செயல். அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டும். அவர் மீது பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, “முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று எப்போதும் கூறியதில்லை. அமைச்சர்களிடம் கை நீட்டி பேசியது நாகரிகமற்ற செயல். கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்று இதுவரை சந்தித்ததில்லை. இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து மாண்பை குறித்து பேசுவதை ஒருபோதும் ஏற்க இயலாது. இனிமேல் இதுபோன்று யார் நடந்துகொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பின்பற்றப்படவில்லை. எஸ்.ஐ. தேர்வுகளில் ஒருவரைக்கூட மேற்கூறிய இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யவில்லை.
தமிழ் மொழியை தமிழகத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தான் குறிப்பிட்டேன். ஆனால், நான் என்ன பேச வருகிறேன் என்பதையே புரிந்து கொள்ளாமல், அதிமுகவினரும், அதிமுகவில் இருந்து திமுக அமைச்சாரக இருக்கும் சேகர்பாபுவும் கூச்சலிட்டனர். மக்களவையில் பேச வாய்ப்பளிக்குமாறு இருக்கையில் இருந்து எழுந்து சென்று, அவைத் தலைவரிடம் முறையிடுவது போன்று தான் இங்கும் செய்தேன்.
முதல்வரும் எனது செயலை தவறாக புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் செய்யத் தவறியதை நான் சுட்டிக்காட்டி செய்ய வைத்தேன். அதை இன்று பேரவையில் பேசினேன். அதை இரு கட்சிகளாலும் ஏற்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...