Published : 20 Mar 2025 06:22 PM
Last Updated : 20 Mar 2025 06:22 PM
மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் மதுரை மக்களுக்கு 24 மணி நேரம் மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என மாநகராட்சி ஆணையாளர் சித்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை-1, திட்டம்-2 மற்றும் காவேரி குடிநீர் திட்டங்கள் மூலம் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. மழையும் பெய்யாததால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, மக்கள் குடிநீருக்கும், வீட்டு தேவைக்கும் டிராக்டர், லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தினர். இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது போதுமான குடிநீர் விநியோகம் செய்து 24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1,609.69 கோடியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை ஓரளவு சீரடைந்துள்ளது. ஆனாலும், அடுத்து 50 ஆண்டு மக்கள் தொகை அடிப்டையிலும், மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் அன்றாட முன்னேற்றத்தை ஆணையாளர் சித்ரா, ஒப்பந்ததாரர் மற்றும் பொறியில் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஒரு நாளைக்கு இவ்வளவு பணிகள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளார்.
மேலும், இப்பணிகளை நேரடியாக சென்று கள ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். அதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் மாதம் இந்த குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சித்ரா கூறியது: ''பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கிவைத்தால் கூடுதலாக மாநகராட்சிக்கு 125 எம்எல்டி குடிநீர் பெறப்படும். தற்போது இந்தத் திட்டம் முடிக்கப்பட்ட வார்டுகளில் பரிசோதனை ஓட்டம் சென்று கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் மற்ற வார்டுகளில் இதற்கானப் பணிகள் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது வரை 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது இந்தத் திட்டத்தில் மதுரைக்கு 60 எம்எல்டி வருகிறது. திட்டம் தொடங்கியதும் திட்டமிட்டப்படி 125 எம்எல்ஏடி குடிநீர் வந்துவிடும்.
கடந்த காலத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி விநியோகிக்காமல் நேரடியாக தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளனர். ஆனால், தற்போது தேவைக்கு அதிகமாகவே பெரியாறு கூட்டுக் குடிநீர் இந்த திட்டத்தில் மதுரைக்கு வர உள்ளது. தற்போது இந்த திட்டத்தில் ஒரு சம்பு(தரை குடிநீர் தொட்டி) 37 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஏற்கணவே 44 பழைய தொட்டிகள் உள்ளன.
இந்தத் தொட்டிகளில் பெரியாறு குடிநீரை ஏற்றி விநியோகம் செய்தால் மக்கள் பயன்பாட்டிற்கு தகுந்தவாறு உடனுக்குடன் குடிநீரை ஏற்றலாம். முன்பு குடிநீரை மேல்தொட்டிகளில் ஏற்றாமலே விநியோகம் செய்ததால் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட நாள் வரையறை செய்தே மாநகராட்சியால் குடிநீர் விநியோகம் செய்ய முடிந்தது. தற்போது அதிகளவு மேல்நிலை தொட்டிகள், சம்புகள் கட்டியதோடு, அதற்கு தகுந்தவாறு பெரியாறு குடிநீரும் வந்து கொண்டிருப்பதால் பற்றாக்குறையில்லாமல் மக்களுக்கு விநியோகம் செய்யலாம்.
குடிநீர் மீட்டர், ஒவ்வொரு வீட்டுக்கு பொருத்தி அதற்கு தகுந்தவாறு குடிநீர் கட்டணம் நிர்ணயியக்கப்படும்போது மக்களே தேவைக்கு தகுந்தவாறுதான் குடிநீரை பயன்படுத்துவார்கள். அதனால், 24 மணி நேரமும் மதுரையில் இந்தத் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது சாத்தியமே,'' என்றார்.
திட்டமிட்டபடி முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணிகளை முடிக்க இரவு, பகலாக பணிகளை ஆணையாளர் சித்ரா ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment