Published : 20 Mar 2025 04:45 PM
Last Updated : 20 Mar 2025 04:45 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 507 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாக சொந்தம் விட்டுபோக கூடாது, சொத்துகளுக்கு ஆசைப்பட்டு 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்கின்றனர். போதிய விழிப்புணர்வு இன்றி கிராமப்புறங்களில் இன்றைக்கும் இது தொடரும் அவல நிலை உள்ளது. மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் என்ஜி.மோகன். இவர், மதுரை மாவட்டத்தில் 2020 முதல் 2024 வரை தடுக்கப்பட்ட குழந்தைத் திருமணங்கள் எத்தனை? இது தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கு விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மதுரை மாவட்ட சமூக நலத் துறை அதிகாரியிடம் கேட்டிருந்தார். இதற்கு சமூக நலத்துறை அதிகாரி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, என்ஜி.மோகன் கூறியது: “கடந்த 2020-ல் குழந்தைகள் திருமணம் குறித்த அதிகாரரிகளுக்கு 79 அழைப்புகள் வந்துள்ளன. இதன்மூலம் 60 குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்திய நிலையில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021-ல் வரப்பெற்ற 183 தகவல்களில் 145 திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022-ல் கிடைத்த 123 தகவல்களின் பேரில் 86 திருமணம் தடுக்கப்பட்ட போதிலும் 37 வழக்கும், 2023-ல் கிடைத்த 134 தகவல்களில் 81 திருமணம் தடுக்கப்பட்டு, 53 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2024 நவம்பர் வரையிலும் குழந்தை திருமணம் குறித்து கிடைத்த 171 அழைப்புகள் மூலம் 135 திருமணங்களை தடுத்த நிலையில், 36 வழக்குகளை போலீஸார் பதிவு செய்த நிலையில், கடந்த 5 ஆண்டில் மட்டும் 507 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டும், வயது வரம்பை மீறி சிறுமிகளுக்கு திருமணம் செய்ததாக 183 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் பணிக்கு மத்திய, மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கிய நிதி விவரம் குறித்தும் கேள்வி கேட்டிருந்தேன். ஆனால் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த நிதியும் இதுவரை பெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. போதிய நிதி ஒதுக்காததால் குழந்தைகள் திருமணங்கள் தடுப்பதில் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சில சிக்கல் இருக்கிறது.
எனவே, மத்திய மாநில அரசுகள், உரிய நிதி ஒதுக்கீடு செய்து, குழந்தைத் திருமணங்களை தடுத்தல் மற்றும் அதிகரிக்கும் போக்சோ வழக்குகளை குறைக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment