Last Updated : 20 Mar, 2025 01:41 PM

1  

Published : 20 Mar 2025 01:41 PM
Last Updated : 20 Mar 2025 01:41 PM

விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுக்க சட்டம் வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப்படம்

விழுப்புரம்: வேளாண் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக மாற்ற முடியும். மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசே விளைநிலங்களை கையகப்படுத்துகிறது.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியிறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போயியுள்ளன. கேரளா போல தமிழகத்தில் இந்தச் சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்காக சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல.

தமிழகத்தில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலைகள் நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும். இந்நிலை தொடர்ந்தால் தமிழகம் கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

தற்காலிக ஊழியர்களின் பணிநிலைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களைப் பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவர் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.

நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. முன்பு வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறவேண்டும்.

புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது, வரவேற்கதக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பும் வரவேற்கதக்கது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திமுகவை போல பொது இடத்தில் உள்ள பாமக கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

சுவரில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாட்டு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதனை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளன. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x