Last Updated : 20 Mar, 2025 12:36 PM

3  

Published : 20 Mar 2025 12:36 PM
Last Updated : 20 Mar 2025 12:36 PM

கோடையில் வன உயிரினங்களுக்கு ஆபத்து: கர்நாடக அரசு தண்ணீர் திறக்க கோரிக்கை

ஓசூர்: ஓசூர் அஞ்செட்டி அடுத்த ராசிமணல் வழியாக செல்லும் காவிரி ஆறு நீர்வரத்து இன்றி ஓடை போல மாறி உள்ளது. இதனால் கோடையில் வன உயிரினங்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கோடையில்வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு காவிரி ஆற்றில் குறைந்தளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள பல்வேறு மாவட்டங்களைக் கடந்து ஓசூர் அஞ்செட்டி வனச்சரகத்தில் ராசிமணல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே அடர்ந்த வனப்பகுதியின் நடுவே செல்லும் காவிரி ஆற்றின் நீர் யானைகள், சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு கிடைப்பதால், பெரும்பாலான வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறாமல், காவிரி கரையோர பகுதியில் தங்கி விடுகிறது. அதே போல் ராசிமணல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகளும் உள்ளன.

ஆனால் தற்போது கோடைக்கு முன்பே வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேலும் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆறு தண்ணீரின்றி சிறிய ஓடைபோல் காணப்படுகிறது. மேலும் வரும் கோடை காலங்களில் காவிரி ஆறு மேலும் வறண்டு தண்ணீறி வெறும் பாறைகளாக காணப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் காவிரி ஆற்றுநீரை நம்பியுள்ள பல ஆயிரம் வன உயிரினங்கள், தண்ணீரைத் தேடி கிராமப்பகுதிகளுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது.

எனவே வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி கோடைக்காலங்களில் கர்நாடக அணைகளிலிருந்து குறைந்தளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என வன உயிரியின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, “கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக - கர்நாடக மாநில எல்லையான உகினியம் அடுத்த தொப்பகுழி எனும் பகுதியில் நுழைந்து அங்கிருந்து ராசிமணல் வழியாக ஒகேனக்கல் செல்கிறது. தெப்பகுழி முதல் பிலிகுண்டுலு வரையில் சுமார் 50 கி.மீ. தொலைவிற்கு அஞ்செட்டி வனச்சரத்திற்குட்பட்ட அடந்த வனப்பகுதி உள்ளது.

இங்குள்ள அரிய வகை வன உயிரினங்கள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தும் காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை நம்பி உள்ளது. கோடையில் ஆற்றில் இறங்கி குளித்தும் வன உயிரினங்கள் வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. இந்நிலையில் தற்போது கோடைக்கு முன்னரே காவிரி ஆறு கடுமையாக வறண்டு சிறு ஓடைகள் போல் காணப்படுகிறது. கோடையில் மேலும் வறட்சி ஏற்படும். இதனால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கர்நாடக அரசு வனப்பகுதியில் ஆங்காங்கே சிறிய தடுப்பணை அமைத்து காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு சென்று வனஉயிரினங்களை பாதுகாக்கின்றனர். எனவே கோடையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றில் வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக குறைந்தளவு தண்ணீர் திறந்து விட வேண்டும்” எனக் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x