Published : 20 Mar 2025 08:23 AM
Last Updated : 20 Mar 2025 08:23 AM

‘எங்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்..!’ - அரசை நம்பி பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை

“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்​திய அரசு சமக்ர சிக்​ஷா அபி​யான் (எஸ்​எஸ்ஏ) திட்​டத்​தின் கீழ், அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு கணினி அறி​வியல் பாடம் பயிற்​று​விப்​ப​தற்​காக ஐசிடி (இன்ஃபர்​மேஷன் கம்​யூனிகேஷன் டெக்​னாலஜி) என்ற பாடத்​திட்​டத்தை அமல்​படுத்​தி, கம்​பியூட்​டர் லேப் அமைக்​க​வும், பயிற்​றுநர்​களை நியமிக்​க​வும் நிதி ஒதுக்கி வரு​கிறது.

அதன்​படி தமி​ழ​கத்​துக்கு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் ரூ.434 கோடியை ஆண்டு தோறும் ஒதுக்​கி​யுள்​ளது. இந்​தத் தொகை​யில் 14,663 பள்​ளி​களில் ரூ.15 ஆயிரம் மதிப்​பூ​தி​யத்​தில் கணினி அறி​வியல் முடித்த கம்​பியூட்​டர் பயிற்​றுநர்​களை நியமித்​திருக்க வேண்​டும். ஆனால், தமிழக பள்​ளிக் கல்​வித்​துறை அதைச் செய்​ய​வில்லை எனக் கூறப்​படு​கிறது.

கருணாநிதி முதல்​வ​ராக இருந்த போது 2010-ல் சமச்​சீர் கல்​வித் திட்​டத்​தின் கீழ் அரசுப் பள்​ளி​களில் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக கொண்டு வந்​தார். இதை நம்பி, கணினி அறி​வியல் படித்த பட்​ட​தாரி இளைஞர்​கள் 60 ஆயிரம் பேர், பி.எட் படித்​தனர். ஆனால், அடுத்து வந்த ஆட்சி மாற்​றத்​தால் கணினி அறி​வியல் தனிப்​பாடம் பள்​ளி​களில் இடம் பெற​வில்​லை. இதனால் தங்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கக்​கோரி பி.எட் முடித்த கணினி அறி​வியல் பட்​ட​தா​ரி​கள் போராட்​டங்​களை நடத்​தினர்.

இந்த நிலை​யில், ஸ்டா​லின் முதல்​வ​ராக வந்​ததும் தங்​களது பிரச்​சினை தீர வழிபிறக்​கும் தங்​கள் வாழ்​வில் ஒளி பிறக்​கும் என எண்​ணிய பி.எட் கணினி அறி​வியல் பட்​ட​தா​ரி​களுக்கு போராட்​டக் களமே மிஞ்​சி​யது. இதுகுறித்து தமிழ்​நாடு பி.எட் கணினி அறி​வியல் வேலை​யில்லா பட்​ட​தாரி ஆசிரியர்​கள் சங்​கத்தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் வெ.குமரேசன் நம்​மிடம் வேதனை​யுடன் பேசி​னார்.

“கலைஞர் முதல்​வ​ராக இருந்​த​போது பள்​ளி​களில் தனிப்​பாட​மாக கணினி அறி​வியலை கொண்டு வந்​தா​லும் அதற்​கான பாடத்​திட்​டம் கொண்​டு​வரப்​பட​வில்​லை. இந்த நிலை​யில் தான் மத்​திய அரசு நாடு முழு​வதும் உள்ள அரசு பள்​ளி​களில் ஐசிடி பாடத்​திட்​டம் அமல்​படுத்​து​வதற்​கு, லேப்​களை அமைக்​க​வும் கணினி பயிற்​றுநர்​களை நியமிக்​க​வும் நிதி ஒதுக்​கியது.

அதன்​படி பள்​ளி​களில் கம்​பியூட்​டர் லேப்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பயிற்​றுநர்​களை நியமிக்​க​வில்​லை. மாறாக, இல்​லம் தேடி கல்​வித் திட்​டத்​தில் பணி​யாற்​றிய​வர்​களுக்கு மாற்​றுப் பெயரில் பணி வழங்​கப்​பட்​டது. ஐசிடி ஆய்​வாளர் என்ற பெயரில் பணி​யமர்த்​தாமல் அவர்​களை நிர்​வாக ஆய்​வாளர்​கள் என பணி​யமர்த்தி உள்​ளனர். அவர்​கள் இன்று எமிஸ் பணி​யைத் தான் மேற்​கொள்​கின்​ற​னர். மாண​வர்​களுக்கு கணினி அறி​வியல் பாடம் நடத்​து​வ​தில்​லை.

இதுதொடர்​பாக அமைச்​சர் அன்​பில் மகேஸை நேரில் சந்​தித்து முறை​யிட்​டும் எந்​தப் பயனு​மில்​லை. வேலை​யில்​லாத எங்​களுக்கு பெண் தர மறுக்​கின்​ற​னர். இதனால் ஆயிரக்​கணக்​கானோர் திரு​மண​மா​காமல் இருக்​கி​றோம். மத்​திய அரசின் நிதியை முறை​யாக தமிழக அரசு பயன்​படுத்​த​வில்​லை; கணினி அறி​வியல் பயிற்​றுநர்​களை நியமிக்​க​வில்லை என்​ப​தற்​கான ஆர்​டிஐ தகவல்​கள் அடங்​கிய 700 பக்க ஆதா​ரங்​கள் என்​னிடம் உள்​ளது.

இதில் கொடுமை என்​ன​வென்​றால், தமி​ழ​கத்​தில் கணினி அறி​வியல் தனிப்​பாட​மாக பள்​ளி​களில் இல்​லாத​தால், எங்​களால் ஆசிரியர் தகு​தித் (டெட்) தேர்​வும் எழுத முடி​யாது. எனவே, பள்​ளி​களில் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக கொண்டு வரவேண்டும். அரசுப் பள்​ளி​களில், முறை​யாக கணினி அறி​வியல் படித்​தவர்​களை கணினி பயிற்​றுநர்​களாக நியமிக்க வேண்​டும். மத்​திய அரசு திட்​டத்​தின் கீழ் கேரளா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, குஜ​ராத் உள்​ளிட்ட பல மாநிலங்​களில் கணினி அறி​வியல் தனிப்​பாட​மாக உள்​ளது. கணினி ஆசிரியர்​களுக்கு அங்கு தகுந்த ஊதி​ய​மும் வழங்​கப்​படு​கிறது.

சர்​வ​தேச அளவில் மென்​பொருள் துறை​யில் தமி​ழர்​களே அதி​களவு கோலோச்சி வரு​கின்​ற​னர். அப்​படிப்​பட்ட தமிழ்​நாட்​டில் கலைஞர் வழி​யில் முதல்​வர் ஸ்டா​லின் கணினி அறி​வியலை தனிப்​பாட​மாக பள்​ளி​களில் கொண்டு வந்​து, பி.எட் முடித்த கணினி அறி​வியல் பட்​ட​தாரி இளைஞர்​கள் வாழ்​வில் ஒளி​யேற்ற வேண்​டும்” என்று சொன்​னார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x