Published : 20 Mar 2025 06:04 AM
Last Updated : 20 Mar 2025 06:04 AM
சென்னை: சென்னையில் இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏசி பேருந்துகள் உட்பட 3,056 பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏசி பேருந்துகள் தவிர்த்து இதர பேருந்துகளில் பயணிக்கும் வகையில் ரூ.320 முதல் ரூ.1000 விலையிலான பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் பயண அட்டையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று ரூ.2 ஆயிரம் பயண அட்டையை அறிமுகம் செய்து பயணிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
நடப்பாண்டு இறுதிக்குள் 225 மின்சார ஏசி பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், ரூ.2 ஆயிரம் பயண அட்டை திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏசி பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிப்பதற்காக ரூ.2 ஆயிரம் பயண அட்டை வழங்கப்படுகிறது. ரூ.1000 பயண அட்டையும் பயன்பாட்டில் இருக்கும். அதன் விலையை உயர்த்தவில்லை. சிக்னல்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டம் குறித்து சாலை வசதிக்கேற்ப பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜக மிஸ்டு காலில் கட்சி நடத்துகிறது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பள்ளிகளில் பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்குவதை நானே பார்த்திருக்கிறேன். அதை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அக்கட்சியின் மாநிலத் தலைவர் உண்மையிலேயே படித்தவர்தானா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொமுச பேரவைத் தலைவர் கி.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.2,000 மதிப்பிலான பயண அட்டை அனைத்து மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment