Published : 20 Mar 2025 12:47 AM
Last Updated : 20 Mar 2025 12:47 AM
சென்னை: தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம் என்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
சி.விஜயபாஸ்கர் (அதிமுக): ‘சிறப்பான நிதி மேலாண்மை செய்து வருவாய் பற்றாக்குறையை குறைப்போம், கடனை குறைப்போம்’ என்று சொன்னீர்கள். ஆனால், இந்த ஆண்டு ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதம் கடன் வாங்கலாம் என்பதற்காக மூச்சு முட்டும் அளவுக்கு கடன் வாங்க வேண்டுமா. ஒவ்வொரு தனிநபர் தலையிலும் ரூ.1.32 லட்சம், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4.13 லட்சம் கடன் சுமையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: கடந்த அதிமுக ஆட்சியில் 2015-16-ல் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2020-21-ல் 3.38 சதவீதத்தை தொட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் திறமையான நிதி மேலாண்மை காரணமாக வருவாய் பற்றாக்குறை அளவை 1.17 சதவீதமாக குறைத்தோம். 2016-17-ல் 1.92 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2025-26-ல் 1.54 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-21 காலகட்டத்தில் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட 57 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. நாங்கள் 2021-25 காலகட்டத்தில் அதை 47.5 சதவீதமாக குறைத்துள்ளோம். மருத்துவ மொழியில் சொல்வதென்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாக குறைத்து பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
விஜயபாஸ்கர்: வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறதே.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: 2020-21 கரோனா காலகட்டம். ஆனாலும், சிறப்பாக செயல்பட்டோம். சாலை வரி, மதுபான வரி, பத்திர பதிவு வருவாய் ஆகியவை அரசுக்கு கிடைக்கவில்லை. தொழில் துறை முடங்கி எந்தவித வரி வருவாயும் இல்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அப்போது மத்திய அரசில் உங்களுக்கு இணக்கமான சூழல் இருந்தது. சில சமரசங்களை செய்தீர்கள். ஆனால், நாங்கள் அதுபோல எந்த சமரசமும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோதும் கரோனா பாதிப்பு, பொருளாதார மந்தநிலை தொடர்ந்தது. இருப்பினும் சிறப்பான நிதி நிர்வாகத்தால் பொருளாதார வளர்ச்சி மீண்டது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...