Published : 20 Mar 2025 12:14 AM
Last Updated : 20 Mar 2025 12:14 AM
சென்னை: தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுக்கு ரூ.37,500, ஆடுக்கு ரூ.6 ஆயிரம், கோழிக்கு ரூ.200 இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உறுப்பின கே.சி.கருப்பணன் (அதிமுக) பேசினார். இதே பொருள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்த்தை ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வானதி சீனிவாசன் (பாஜக) பேசினர். உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, “தமிழகம் முழுவதுமே தெருநாய், வெறிநாய் தொந்தரவுகள் உள்ளன. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, காலையில் நடைப்பயிற்சி செல்பாவ்ர்கள் கூட தெருநாய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து, அதே பகுதியில் மீண்டும் கொண்டு வந்து விடுகின்றனர். ஆனால், நிறைய இடங்களில் என்ன பிரச்சினை என்றால், கருத்தடை சிகிச்சைக்கு அரசு கொடுக்கும் பணம் போதவில்லை. அதனால், நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்ய மாட்டோம் என்று மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், கருத்தடை சிக்சிசைக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது: சமீப காலங்களில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை, கோழி போன்ற கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.
அதனடிப்படையில், மாநிலத்திலுள்ள கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய, கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் இழப்பீடு வழங்கிட முதல்வர் இன்று (நேற்று) காலை ஆணையிட்டுள்ளார். அதன்படி, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு ரூ.37,500, வெள்ளாடு - செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ.4,000, கோழி ஒன்றுக்கு ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு ரூ.42 லட்சத்து 2,600 இழப்பீடாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிறிது நேரத்துக்கு பின்னர் பேசிய இ.பெரியசாமி, “இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் உயிரிழப்புக்கு வழங்க அறிவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரத்தை ரூ. 6 ஆயிரமாகவும், கோழி உயிரிழப்புக்கு அறிவிக்கப்பட்ட ரூ.100-ஐ ரூ.200 ஆகவும் உயர்த்தி வழங்கிட அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, “ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் தெருநாய்களை பிடித்து ஒரே இடத்தில் அடைப்பதை முன்மாதிரியாக வீட்டு வசதி துறை அமைச்சர் முன்மாதிரியாக செய்துள்ளார். அதேபோல், எல்லா நகரங்களிலும் செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வெறிநாயை பிடித்து, அதனை குணப்படுத்தி மீண்டும் விட வேண்டும் என்று தான் சட்டத்தில் இடம் உள்ளது. இதனை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவு இருப்பதால், அதனை மீறி செயல்பட முடியாது. உச்சநீதிமன்றத்தில் மறு உத்தரவு வந்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment