Published : 19 Mar 2025 10:49 PM
Last Updated : 19 Mar 2025 10:49 PM
பழநி: திருச்செந்தூர், ராமேசுவரத்துக்கு அடுத்தப்படியாக, பழநி கோயிலில் பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி (47), தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு, புதன்கிழமை (மார்ச் 19) மாலை பழநி முருகன் கோயிலுக்கு வந்தார். அவர் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு ரூ.10 கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.
உடனடியாக மலைக்கோயிலில் உள்ள மருத்துவ உதவி மையத்தில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு அழைத்து வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அண்மையில் திருச்செந்தூர், ராமேசுவரம் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த போது பக்தர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment