Published : 19 Mar 2025 08:04 PM
Last Updated : 19 Mar 2025 08:04 PM

மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதி கோரி வழக்கு

சென்னை: மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி அன்று நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் சைவ மந்திரங்கள் ஓத அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சேவா அறக்கட்டளைத் தலைவரான டி.சுரேஷ்பாபு, தாக்கல் செய்துள்ள மனுவில், “கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோயிலில் வரும் ஏப்.4-ம் தேதி அன்று குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ் கடவுளான மருதமலை முருகன் கோயில் அருணகிரிநாதரால் பாடல்பெற்ற திருத்தலம் மட்டுமின்றி, கோயில் அருகே உள்ள மலைக் குகையில் பாம்பாட்டி சித்தர் யோக நிலையில் ஜீவசமாதியடைந்த முக்கிய தலமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்டர் பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மாணவரான நான் கோவை, திருப்பூர், தருமபுரி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் வேள்வி குண்ட வழிபாடு பூஜைகளை தமிழில் சைவ மந்திரங்களைக்கூறி சிறப்பாக நடத்தியுள்ளேன். அதேபோல மருதமலை முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா வேள்வி குண்ட நிகழ்வுகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் சைவ மந்திரங்களை ஓத அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.

தமிழில் குடமுழுக்கு விழா நடத்துவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x