Published : 19 Mar 2025 07:03 PM
Last Updated : 19 Mar 2025 07:03 PM
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் நிதி ரூ.4 கோடியாகவும், கவுன்சிலர் நிதி ரூ.60 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ், மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
“சென்னை மாநகராட்சியில் வரும் நிதியாண்டில் (2025-26) வருவாய் வரவு ரூ.5145 கோடி, வருவாய் செலவினம் ரூ.5214 கோடியாக இருக்கும். மூலதன வரவு ரூ.3121 கோடியாகவும், மூலதன செலவு ரூ.3190 கோடியாகவும் இருக்கும். சொத்து வரி நடப்பு நிதியாண்டில் ரூ.1,900 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது வரும் நிதியாண்டில் ரூ.2,020 கோடியாக உயரும். அதேபோல் தொழில் வரி ரூ.550 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயரும்.வரும் நிதியாண்டில் மாநில அரசால் ஒதுக்கப்படும் முத்திரைத்தாள் மீதான கூடுதல் வரி ரூ.400 கோடி கிடைக்கும்.
மாநில நிதிக்குழு மானியம் ரூ.1,150 கோடியாக இருக்கும். தொழில் உரிம கட்டணம், கட்டிட உரிம கட்டணம் உள்ளிட்டவை மூலம் இதர வருவாய் ரூ.919 கோடியாக இருக்கும். வரும் நிதியாண்டில் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவு ரூ.2,232 கோடியாகவும், நிர்வாக செலவு ரூ.297 கோடியாகவும், பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணி செலவினங்கள் ரூ.1,864 கோடியாகவும், கடனுக்கான வட்டி செலுத்துதல் ரூ.68 கோடியாகவும் இருக்கும்.
பேருந்து சாலை துறைக்கு ரூ.628 கோடி, மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி, திடக்கழிவு மேலாண்மை துறைக்கு ரூ.352 கோடி, பாலங்கள் துறைக்கு ரூ.164 கோடி, கட்டிடங்கள் துறைக்கு ரூ.413 கோடி, தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.9 கோடி, மின் துறைக்கு ரூ.50 கோடி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரூ.10 கோடி, இயந்திர பொறியியல் துறைக்கு ரூ.22 கோடி, கல்வித் துறைக்கு ரூ.5 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.4 கோடி, மருத்துவ சேவை துறைக்கு ரூ.40 லட்சம், சிறப்பு திட்டங்களுக்கு ரூ.179 கோடி, பூங்கா துறைக்கு ரூ.39 கோடி, மண்டலங்களுக்கு ரூ.279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
பட்ஜெட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த 82 அறிவிப்புகளில், 39 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 39 அறிவிப்புகள் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 4 அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக கைவிடப்பட்டதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment