Published : 19 Mar 2025 04:11 PM
Last Updated : 19 Mar 2025 04:11 PM
சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர்.
கடந்த 2006 - 11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ. 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெரும் தொகையில் ஹவாலா பரிவர்த்தனை மூலமாக வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக்கூறி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் நிர்வாக இயக்குநர்களாக உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழில் வேலவன் முன்பாக இன்று காலை நேரில் ஆஜராகினர். தான் அமைச்சராக இருப்பதால் வழக்கின் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக்கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment