Published : 19 Mar 2025 03:04 PM
Last Updated : 19 Mar 2025 03:04 PM
சென்னை: நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று உறுதி அளித்துள்ளார்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது: “திருநெல்வேலி மாநகரில் கடந்த 18-ம் தேதி மசூதியில் அதிகாலை ரமலான் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் சில நபர்களால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே முஸ்லிம் தைக்கா ஒன்றில் முத்தவல்லி நிர்வாகியாக இருந்தவர்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே திருநெல்வேலி மாநகர் காவல் ஆணையர், டவுன் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும், முறையாக காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஜாகிர் உசேன் யாரை குற்றம்சாட்டி புகார் அளித்தாரோ அவரை அழைத்து காவல்துறையினர் கட்ட பஞ்சாயத்து செய்ததாக தெரிய வருகிறது. காவல்துறையினர் ஜாகிர் உசேன் புகார் அளித்தபோதே முறையாக விசாரணை நடத்தாத காரணத்தினால் இப்படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
கண்டனம்: காவல்துறையினருடைய அலட்சியத்தால் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இப்படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், என்னை 20, 30 பேர் கொண்ட ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு சுற்றி வருகிறது. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் இருவரும் நான் கொடுக்கும் புகார்களை குற்றவாளிகளுக்கு வழங்கி உறுதுணையாக இருக்கிறார்கள்.
எப்படியும் என்னை கொன்று விடுவார்கள் என எனக்கு தெரியும் என்று முதல்வருக்கு அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ரமலான் தொழுகை மாதத்தில் இந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன் அதிகாரிகளிடம் முறையாக புகார் கொடுத்தும், அந்த புகாரை காவல்துறை உரிய முறையில் விசாரிக்காததால் இப்படுகொலை நிகழ்ந்துள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
புகார் கொடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை செயல்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது என்பதை இந்த நிகழ்வு மூலம் தெரிய வருகிறது. இக்கொலை சம்பவத்துக்கு காரணமானவர் குற்றவாளிகள் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதே கருத்தை உறுப்பினர்கள் ஜே. ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), முகமது ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), டி. ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் வலியுறுத்தி பேசினர்.
முதல்வர் ஸ்டாலின் பதில்: கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “திருநெல்வேலி மாநகரம் மூர்த்தி ஜஹான் தைக்கா தெரு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கடந்த 18-ம் தேதி அதிகாலை திருநெல்வேலி மாநகர தெற்கு மவுண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் வழி மறித்து தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி தொட்டி பாலத் தெருவைச் சேர்ந்த இருவர் திருநெல்வேலி குற்றவியல் நடுவர்-4 நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்றவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி, அவரது முகநூல் பக்கத்தில் ஒரு காணொலி வெளியிட்டுள்ளது பற்றியும், அதில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, ஜாகிர் உசேனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌஃபிக் என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஒரு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இடப்பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற முகமது தௌஃபிக் மற்றும் அவரது மைத்துனர் அக்பர்ஷா ஆகியோர், ஜாகிர் உசேன் மீதும், ஜாகீர் உசேன் எதிர்த்தரப்பினர் மீதும் மாறி, மாறி புகார் மனுக்களை அளித்துள்ளனர். இவற்றின்மீது காவல் துறையினரால் சிஎஸ் ஆர் எண்கள் வழங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜாகிர் உசேன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து, ஏற்கெனவே பதியப்பட்ட சிஎஸ்ஆர் அடிப்படையில், அவரை அச்சுறுத்துவதாக குறிப்பிட்ட எதிர்த்தரப்பினரை திருநெல்வேலி மாநகர காவல் நிலையத்துக்கு அழைத்து காவல் துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையிலேயே, இந்த கண்டிக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது.
இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாரபட்சமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கு மட்டுமல்ல, எந்த குற்றத்தில் ஈடுபடுபவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...