Published : 19 Mar 2025 02:14 PM
Last Updated : 19 Mar 2025 02:14 PM

மழைநீர் வடிகால் முதல் திடக்கழிவு மேலாண்மை வரை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஒதுக்கீடு விவரம்

கோப்புப்படம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி பற்றாக்குறை ரூ.68 கோடியாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அதறாகன ஒதுக்கீடுகள் இதோ...

> பேருந்து சாலைகள் : சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு ரூ.628.35 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மழைநீர் வடிகால்வாய்கள் : மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக மழைநீர் வடிகால் துறையின் கீழ் 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.1032.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> திடக்கழிவு மேலாண்மை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர துப்புரவு பணிக்கு தேவையான தளவாட பொருட்களை கொள்முதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளுதல், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தினை அகழ்ந்தெடுக்கும் பணி மற்றும் இதர பணிகளுக்காக, 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.352.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பாலங்கள்: உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி மற்றும் மூலதன நிதி ஆகியவற்றின் மூலமாக புதிய பாலங்கள் கட்டுமான பணிகள் மற்றும் பாலங்கள் விரிவுபடுத்தும் பணிகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.164.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கட்டிடம் : பெருநகர சென்னை மாநகராட்சியில், NUHM திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், வடசென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் மூலதன நிதி ஆகியவற்றினை கொண்டு நகர்ப்புர மற்றும் பிற பணிகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.413.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தகவல் தொழில்நுட்பம்: அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான கணிப்பொறி, அச்சு கருவிகள், டிஜிட்டல் சர்வர்கள் மற்றும் வலைதள அமைப்பு உபகரணங்கள் ஆகியவற்றினை கொள்முதல் செய்வதற்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.9.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மின்சாரம் : பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி மூலம் புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைக்கும் பணி, மின்வடங்கள் புதியதாக மாற்றுதல்மற்றும் இதர பணிகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.50.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்: புதியதாக வீடியோ திரை அமைத்தல், மாநகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வட்டார அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இயந்திரப்பொறியியல் : சென்னை பெருநகர துப்புரவு பணிக்கு தேவையான கனரக வாகனங்கள், கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயந்திரம், மரம் வெட்டும் உபகரணங்கள் போன்றவைகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கல்வி: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான சாய்வு மேஜைகள், ஆய்வக உபகரணங்கள் வாங்குதல், பள்ளிகளுக்கு தேவையான கணிப்பொறி, மின்னணு பலகைகள் கொள்முதல் செய்தல் போன்றவைகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சுகாதாரம்: பெருநகர சென்னை மாநகராட்சி பரிசோதனை கூடங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக கையில் எடுத்து செல்லத்தக்க புகைபரப்பும் இயந்திரம் மற்றும் வாகனத்தில் பொருத்தக்கூடிய புகைபரப்பும் இயந்திரம் கொள்முதல் செய்ய 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.4.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மருத்துவ சேவைகள் துறை : நவீனப்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக தேவைப்படும் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் செய்ய 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சிறப்பு திட்டங்கள் : உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி, சீர்மிகு நகரத் திட்டம், சிட்டீஸ் திட்டம், நிர்பயா திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம், போன்ற திட்டங்களை மேற்கொள்ள 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.179.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி நிலங்களில் பூங்காக்கள், பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துதல், விளையாட்டுத்திடல்களை அமைத்தல், உடற்பயிற்சி கூடங்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் போன்ற பணிகளுக்காக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.39.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மண்டலங்கள்: மண்டலம் 1 முதல் 15 வரை அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனைத்து மண்டலங்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.279.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டம் : 2025-2026ஆம் நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைபெற ஏதுவாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் : 2025-2026ஆம் நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைபெற ஏதுவாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x