Published : 19 Mar 2025 12:04 PM
Last Updated : 19 Mar 2025 12:04 PM

சுனிதா வில்லியம்ஸுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், “விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் வில்மோர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்து என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஃபால்கன் 9 ராக்கெட்டுடன் டிராகன் விண்களம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்டோருடன் மேலும் 2 வீரர்களும் ஃப்ளோரிடா அருகே கடலில் பத்திரமாக இறங்கினர். அவர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கும் அவரை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர உதவிய அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் 9 மாதங்களுக்குப் பிறகு, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் வாழ்த்தைப் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x