Published : 19 Mar 2025 01:28 AM
Last Updated : 19 Mar 2025 01:28 AM
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பணப்பலன் நடைமுறையை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் நேற்று பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை கட்சித் தலைவர் டி.ராமச்சந்திரன் (தளி தொகுதி) பேசியதாவது: நிதிப்பகிர்வில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து அதிக வரிவருவாய் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது. தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதியை வழங்கவில்லை. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்கிறது.
தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2,152 கல்வி நிலுவைத்தொகையை நமது எம்.பி.க்கள் கேட்டால் நாகரீகம் இல்லாதவர்கள் என்று மத்திய அமைச்சர் விமர்சிக்கிறார். மத்திய அரசு தமிழகம் மீதும் தமிழர்கள் மீதும் தொடர்ந்து வன்மம் காட்டி வருகிறது. மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிராக செயல்படுகிறது.
அரசு பணிகளில் 40 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்டும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் அரசு துறைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த காலியிடங்களையும் அரசு படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை (ஈ.எல்) சரண் செய்து பணப்பலன் பெறும் திட்டம் 1.4.2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment