Published : 18 Mar 2025 10:03 PM
Last Updated : 18 Mar 2025 10:03 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில் சுமார் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முழுமையாக பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் திறப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஆன்மிக பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க மறுசீரமைப்பு பணிகளை கடந்த 26.05.2022 அன்று கானொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.90.20 கோடி செலவில் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சூழலமைப்பு, எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையத்தைப் போன்ற வசதிகளை வழங்குவதற்காக ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் புதிய இரண்டு மாடி கட்டிடம், பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள், 4 மின் தூக்கிகள், பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிவறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள், வர்த்தக மையங்கள், பயணிகள் ரயில் நிலையத்துக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதைகள் இதில் அடக்கம்.
மறுசீரமைப்பு பணிகளில் ராமேசுவரம் புதிய ரயில் நிலையக் கட்டடம் ராமேசுவரம் கோயில் போன்ற தோற்றத்திலும், இதற்கான தூண்கள் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத் தூண்கள் போல அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடைமேடைகள் எண் 3, 4 மற்றும் 5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகளுக்காக 2022 டிசம்பர் மாதம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமேசுவரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரையிலும் இயக்கப்படுகிறது. அதேசமயம், பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து, மண்டபத்திலிருந்து பராமரிப்பு பணிகளுக்காக பயணிகள் இல்லாமல் காலி ரயில் பெட்டிகள் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு பராமரிப்பு பணிகளுக்காக தினந்தோறும் கொண்டு செல்லப்படுகின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில் சுமார் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முழுமையாக பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் ராமேசுவரம் ரயில் நிலையம் திறப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முழுவதும் நிறைவடைந்து, பாலத்தை திறப்பதற்கு மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படும்,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment