Published : 18 Mar 2025 05:17 PM
Last Updated : 18 Mar 2025 05:17 PM
சென்னை: மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 19 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவுக்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்துக்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற மார்ச் 19,20 மற்றும் 21 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கெனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment