Published : 18 Mar 2025 04:16 PM
Last Updated : 18 Mar 2025 04:16 PM

ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

கோப்புப்படம்

சென்னை: “எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நிதி நிலை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பணைகள் கட்டப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் பேசுகையில், “கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரை ஒன்றியம், திருமலையம்பாளையம் பேரூராட்சி, வழுக்கல் கிராமத்தில் உள்ள தடுப்பணையைச் சீரமைக்க அரசு முன் வருமா?” என்று கேட்டார். அதையடுத்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜேஷ்குமார், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.

அவற்றுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், “எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நிதி நிலை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பணைகள் கட்டப்படும்.

கங்கை கொண்டானில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்கள், ஆறுகளின் கரைகள் பெரு வெள்ளத்தில் பெரிதும் சேதமடைந்துள்ளன. எனவே, நாஞ்சில் நாட்டில் உள்ள வாய்க்கால்கள், ஆறுகளின் கரை சரி செய்வதில் தனிக்கவனம் செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

முருங்கை விவசாயிகளுக்கு அவர் வீடுகளிலேயே ஏற்றுமதி பயிற்சி: நிலக்கோட்டை எம்எல்ஏ எஸ்.தேன்மொழி பேசும்போது, “விருவீடு பகுதியில் முருங்கை இலைப்பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் அளிக்கையில், “விருவீடு பகுதியில் முருங்கை இலைப்பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் இல்லை. முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்படுகிறது. தற்போது கடலூர், திருநெல்வேலி மாவட்டங்கள் இந்த மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முருங்கை சாகுபடி செய்யும் 900 விவசாயிகளுக்கு முருங்கை இலை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், ஏற்றுமதி சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

50 வருவாய் கிராமங்களில் உள்ள முருங்கை விவசாயிகளுக்கு அவரவர் இருக்கும் இடங்களுக்கே சென்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சேவை மையம் மூலம் தனியார் தொழில் முனைவோர் முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x