Published : 18 Mar 2025 04:04 PM
Last Updated : 18 Mar 2025 04:04 PM
சென்னை: “அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய (மார்ச் 18) கேள்வி நேரத்தின்போது, வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ஓ.எஸ் மணியன் பேசுகையில், “வேதாரண்யம் தொகுதி, துளசியாபட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் தொடங்க அரசு முன்வருமா” என்று கேட்டார். அதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “வாழ்வியல் தத்துவத்தை ஒரு வரியில் வழங்கிய அவ்வையார் பெயரில் அறிவுக்களஞ்சியம் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்” என்றார்.
அப்போது அவை முன்னவர் துரைமுருகன், “அவ்வையார் ஒருவர் அல்ல. ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.அப்போது, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “ஐந்து அவ்வையார் இருக்கும்போது வேதாரண்யத்தில் உள்ள அவ்வையார் யார்? என்பதுதான் தற்போதைய கேள்வி” என்றார்.
அதற்கு அதிமுக எம்எல்ஏ., ஓ.எஸ்.மணியன், “ஒரு காலத்தில் பாடல் பாடி எழுதியவர்கள் பெண்ணாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக சொல்லப்படுகிறது” என்றார். அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், “நமது வீட்டில் உள்ள வயதான பெண்களை ஆயா என அழைப்போமே அதுபோலவா?” என்றார்.
அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல் என எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
மீண்டும் ஓ.எஸ்.மணியன், “வேதாரண்யம், துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு ரூ.13 கோடியில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. அங்கு, எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒற்றை வரிகளில் வாழ்வியல் தத்துவங்களை அருமையான, அற்புதமான பாடல்களாகக் கொடுத்துள்ள அவ்வையாரின் புத்தகங்களை வைத்தாலே போதும்” என்றார்.
அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “மணிமண்டபங்களில் அறிவை வளர்க்கும் வகையில் படிப்பகம், நூலகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல அவ்வையார் மணிமண்டபத்திலும் செய்தித் துறை அமைச்சருடன் பேசி நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...