Published : 18 Mar 2025 12:39 AM
Last Updated : 18 Mar 2025 12:39 AM

வன்னியர் சங்கம் சார்பில் மே 11-ல் மாநாடு; பட்டியலின தலைவர்களும் பங்கேற்க வேண்டும்: ராமதாஸ் அழைப்பு

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ல் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சி தான் அமையும். பிரச்சினைகள் இல்லாமல் மாநாட்டை நடத்த வேண்டும். பாமகவுக்கு யாரும் எதிரி கிடையாது. பாமக நிறுவனர் ராமதாஸ் எல்லா சமுதாயத்திற்கும் சமமானவர். சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோயில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டும். மாநாட்டு கூட்டத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டும். நமக்கான சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: அனைத்து மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சியாக பாமக உள்ளது. 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக்கொள்வது என்னவெனில், நீங்களும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள். பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். அரசு மற்றும் காவல்துறை வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அண்ணா சொன்னதைப் போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் பட்டியல் சமூகத்தினருக்கு வாழ்த்து சொல்லி அனுப்புங்கள்.

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளன. இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியை சொல்லும். அவர்களுக்கு அரணாக இருக்கும். வன்னியர் சங்க மாநாட்டுக்கு எப்படி செல்வது என யோசிக்காதீர்கள். 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

பல சமுதாய தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு. 1998-ல் நடந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை. இப்படி ஒரு மாநாடு நடைபெற்றதில்லை என கூறும் அளவுக்கு நடத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x