Published : 17 Mar 2025 05:37 PM
Last Updated : 17 Mar 2025 05:37 PM
சென்னை: “திமுக அரசின் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. திமுக ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் ஏ1 குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் கீழ் செயல்படும் திமுக காவல் துறை, தமிழக பாஜகவின் இன்றைய டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று படாத பாடுபடுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
நடந்தது என்ன? - டாஸ்மாக் மூலம் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு வருவதை தடுக்கும் வகையில் பாஜக தலைவர்களை வீட்டிலேயே போலீஸார் கைது செய்தனர். இதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை அக்கரை சோதனை சாவடி அருகே தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள். டாஸ்மாக்கில் வரும் பணத்தை வைத்துதான் ஆட்சியையே நடத்துகிறார்கள். இதை இல்லையென்று சொன்னால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும்.
திமுக வந்த பிறகு டாஸ்மாக்கின் வளர்ச்சி 48 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.33 ஆயிரம் கோடி வரை வருமானம் உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின்தான் குற்றவாளி. டெல்லியைவிட மோசமான சூழல் தமிழகத்தில் உள்ளது. எத்தனை முறை கைது செய்தாலும், மக்களுக்காக பாஜகவின் போராட்டம் தொடரும். மேலும் இதே கோரிக்கைக்காக மார்ச் 22-ம் தேதி மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.
இதனிடையே, சாலிகிராமத்தில் வீட்டில் வைத்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை உட்பட 50 நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து அங்கிருந்த மண்டபம் ஒன்றில் அடைத்தனர். பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், எம்எல்ஏ சி.சரஸ்வதி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் அருகில் கைது செய்யப்பட்டனர். இதேபோல், பல்வேறு இடங்களில் பாஜக தலைவர்களை போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து, வீட்டுக் காவலில் சிறைபிடித்ததனர்.
அதேநேரம் காலை 9 மணி முதலே பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.
இதில் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்ஏல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, செயலாளர் அலிஷா அப்துல்லா, பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பாஜகவினருக்கும் போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...