Published : 17 Mar 2025 03:47 PM
Last Updated : 17 Mar 2025 03:47 PM
சென்னை: தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்கான சிறப்பு இணையப் பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல் வெளியீடு - சங்ககாலம் முதல் சமூக நீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளின் பெருந்தொகுப்பாகவும் வரலாற்று ஆவணமாகவும் ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிய கால நிதிநிர்வாக நடைமுறைகள், நவீன தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்நூல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழகத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. இந்த ஆவண நூலில், பொருளியல், வரலாற்றுத் துறைகளைச் சேர்ந்த தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இச்சிறப்புமிக்க நூலினை தமிழக முதல்வர் வெளியிட, நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு இணையப் பக்கத்தை தொடங்கி வைத்தல்: ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலையொட்டி சேகரிக்கப்பட்ட, நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், ஒன்றிய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகச் சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு இணையப் பக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு எனப் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இவை உதவும். தமிழக முதல்வர் வெளியிட்ட ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலை மேற்கண்ட இணையப் பக்கத்தில் வாசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment