Published : 17 Mar 2025 03:35 PM
Last Updated : 17 Mar 2025 03:35 PM

சென்னை - நுங்கம்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சி பூங்கா திறப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி சார்பில் மேம்படுத்தப்பட்ட மாநகராட்சிப் பூங்காவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் மகளிர் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 17) சென்னை நுங்கம்பாக்கத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எம்.ஒ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாட்டில் அரசுடன் பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு சிந்தனையால் உதித்த திட்டம்தான் “நமக்கு நாமே திட்டம்”. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பு ஒரு பங்கு என்றால், தமிழக அரசின் பங்களிப்பு இரண்டு பங்காக இருக்கும். அதனடிப்படையில் தமிழகத்தில் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் அரசின் 2 பங்கு நிதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் தமிழகத்தினை அனைத்து வகையிலும் முதலாவது மாநிலமாக உருவாக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றார். சென்னையை சிங்காரச் சென்னையாக உருவாக்கிட பூங்காக்கள், பல்வேறு வகையான பாலங்கள், சாலைகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், மெட்ரோ ரயில் என பல்வேறு வசதிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றார்.

தமிழக முதல்வரின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் வகையில் நுங்கம்பாக்கம் எம்.ஒ.பி. வைணவக் கல்லூரி அருகிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவை கல்லூரியை சுற்றியுள்ள பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கல்லூயின் மாணவிகள் பயன்படுத்திடும் வகையில், எம்.ஒ.பி. வைணவக் கல்லூரியின் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 சதவீத முழுப் பங்களிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேம்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி பகுதி, நடைபாதை, இருக்கைகள், 35 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்ட கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான திறந்தவெளி சிறுகலையரங்கம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள், உலர் கழிவுகளை உரமாக்கும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு, 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த பூங்காவின் பராமரிப்பு பொறுப்பையும் கல்லூரியே ஏற்றுக் கொண்டுள்ளது.மேலும் இக்கல்லூரி மேற்கொண்டுள்ள மரம் நடும் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மலர்மாலைக்கு பதிலாக ‘மரம் சான்றிதழ்’ வழங்குவதுடன், வருகை தந்த விருந்தினரின் பெயரில் ஒரு மரத்தை நட்டு, பராமரித்து வருகின்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வரை சிறப்பித்து கல்லூரியின் முதல்வர் “மரம் சான்றிதழை” வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, எம்.ஓ.பி. வைணவ கல்லூரி முதல்வர் முனைவர் அர்ச்சனா பிரசாத், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார ஆணையர்கே.ஜெ.பிரவீன்குமார், மாமன்ற உறுப்பினர் நந்தினி உள்பட கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x