Published : 17 Mar 2025 06:10 AM
Last Updated : 17 Mar 2025 06:10 AM

கருப்பை வாய், மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை அவசியம் - ‘பெண் இன்று’ நிகழ்வில் மருத்துவர் அமுதா ஹரி அறிவுரை

`இந்து தமிழ் திசை' நாளிதழின் ‘பெண் இன்று' சார்பில் சென்னை, வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவில் பங்கேற்ற வாசகிகளின் ஒரு பகுதியினர். | படங்கள் : ம.பிரபு |

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா, சென்னை, வடபழனியில் உள்ள எஸ் ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மகளிர் திருவிழா நிகழ்ச்சியில் துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். விழாவை, மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மருத்துவர் அமுதா ஹரி பேசியதாவது: தோற்றம் பெண்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால், ஆரோக்கியத்துடன், தெளிவான, ஞானச் செருக்கோடு இருப்பதே பெண்களுக்கு அழகு. ஒரு தலைவலிக்கு உடனடியாக மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்கள், உடலின் பிற பிரச்சினைகளை உடனுக்குடன் கவனிப்பது இல்லை.

அனைத்தையும் விட்டுக் கொடுப்பதே பெண்களுக்கான குணநலன் என நினைக்கிறோம். அது சரியல்ல. நமக்கான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். மாதவிடாய் என்பது மாதம் ஒரு முறை வர வேண்டும் என்பது கட்டாமயல்ல. வழக்கமாக 45 நாட்களோ, 60 நாட்களுக்கு ஒரு முறையோ வருவதில் எந்தசிக்கலும் இல்லை. இதுபோன்ற சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகிய இரு பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் கருப்பை வாய் குறித்து பரிசோதிக்கவே பெண்கள் அஞ்சுகின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்ய வேண்டும். வளரிளம் பெண்கள் கட்டாயம் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கருத்தடைக்கு சிறந்த முறை ‘காப்பர் டி’ பயன்படுத்துவதுதான். இதைச் சொன்னால் யாருக்கோ நடந்தவற்றை எண்ணி பயப்படுகின்றனர். ‘காப்பர் டி’ பயன்படுத்த யோசிப்போர் கருவை கலைக்க யோசிப்பதில்லை. கருக்கலைப்பில்தான் மன உளைச்சல், உடல் பாதிப்பு அதிகம். மாதவிடாய் நிற்கும் அறிகுறி தெரியும் போது சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சமூக செயற்பாட்டாளர் ஓவியா பேசும்போது, “பெண்கள் ஆண்களை சார்ந்திருப்பது போன்றே தோன்றும். வரலாற்று ரீதியாக மிகப்பெரிய யுத்தங்களை நடத்தியது பெண்கள்தான். ஆனால், ராஜ்ஜியத்தை ஆண்டது ராஜா. அவர்களை திருமணம் செய்பவரே ராணி என்பது போன்ற கற்பிதம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்களின் சதவீதம் 17-க்கு கீழ் தானே இருக்கிறது. நாம் கேட்பதே 33 சதவீதம்தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் இருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் பெண்களே இருப்பதாக ஆச்சரியப்படுகின்றனர். 50 சதவீத மக்கள் தொகைக்கு அதிகமாக இருப்பவர்கள், அனைத்து இடங்களிலும் இருப்பதில் என்ன ஆச்சரியம். எனினும், உயர் பதவிகளில் பெண்கள் பெரிதளவு இருப்பதில்லை. பள்ளி ஆசிரியர்களில் பெண்கள் 60 சதவீதமாகவும், கல்லூரி பேராசிரியர்களில் ஆண்கள் 60 சதவீதமாகவும் இருக்கின்றனர்.

பெண்களுக்கு ஓட்டுநர் வேலை பெறவே போராட்டம் நடந்தது. ஓட்டுநருக்கான சராசரி உயரத்துக்கு கீழ் பெண் இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட பல முட்டுக்கட்டைகள் போட்டனர். ஒரு மேலாண் இயக்குநர் எழுதிய கடிதத்தில், கருத்தரித்தால் பெண் எப்படி ஓட்டுநர் சீருடை அணிவார் என கேட்டிருந்தார். அது தையல் கடைக்காரரின் கவலை என பதிலளித்தோம். எனவே, பெண்கள் தனி உரிமைகளை நிலைநாட்டுவதோடு நிறுத்திவிடாதீர்கள். பெண் சமூகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பை லட்சியமாக கொள்ள வேண்டும்” என்றார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகிகள் மேலாண்மைக் குழுத் தலைவர் (வடபழனி) டாக்டர் வி.சசிரேகா வாழ்த்தி பேசும்போது, “இந்த உலகம் ஆண்களுக்காக ஆண்களால் படைக்கப்பட்டது. விபத்தில் ஆண் ஓட்டுநரை விட பெண் ஓட்டுநரே அதிகளவில் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் சீட் பெல்ட் ஆண் உடலைமைப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண் என்ற ஜீவன் அனைத்து பணிகளிலும் பங்களிக்கும் என அவர்களுக்கு தெரியவில்லை. இதை சொல்லியதோடு, வெளியே வந்து சாதித்த பிறகுதான் ஒவ்வொன்றாக மாறி வருகிறது. முற்றிலுமாக மாற வேண்டுமானால் தீர்மானிக்கும் அதிகாரமிக்க இடத்தில் பெண்கள் இடம்பெற வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக வீட்டில் இருந்தே பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார்.

விழாவில் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்ற வாசகிகள்.

போட்டியில் பெண்கள் அசத்தல்: தொடர்ந்து வாசகிகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கலகலப்பான போட்டிகள் நடைபெற்றன. அனைத்து வயதினரும் ஆர்வத்தோடு பங்கேற்று உடனுக்குடன் பரிசுகளை பெற்றனர். வந்திருந்த அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட்டன. இரு வாசகிகள் பம்பர் பரிசையும் தட்டிச் சென்றனர். நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த
சிறுமி மோகன சங்கரி பரத நாட்டியம் ஆடினார்.

இந்த மகளிர் திருவிழாவை உஜாலா நிறுவனத்துடன் இணைந்து நமது ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. லலிதா ஜூவல்லரி, லலிதாம்பிகை கருவுறுதல் மையம், மஹாத்ரி ஃபுட் புராடக்ட்ஸ், ஜெ.டி.எஸ் ஃபுட்ஸ் அண்ட் பர்பிள் ஸ்வீட்ஸ், சத்யா ஏஜென்சீஸ், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், ஸ்ரீ ஐஸ்வர்யா சாரிஸ் ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (நண்டு பிராண்ட்), ஹெஸ்த் பாஸ்கெட், சௌபாக்யா என்டர்பிரைசஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, கெவின்ஸ் மில்க் ஷேக், காட்டன் ஹவுஸ், ரெபியூட் குடிநீர், பிரே லேடி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (வடபழனி வளாகம்), பத்மம் ரெஸ்டாரன்ட், வாக் பக்ரி டீ உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

முன்னதாக, நடைபெற்ற கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மோகன சங்கரியின் பரத நாட்டியத்தை பெண்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி மாணவிகளின் ‘நீ ஆண் நீ பெண்’ நாடகத்தை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் வுமன் ஆப் சப்ஸ்டென்ஸ் விருது: சென்னை வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ‘மீனவ' சாந்தி. இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான அவர், மீனவப் பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சுனாமியால் வீடிழந்த மீனவர்களுக்கு குடியிருப்பு கட்டித் தர வலியுறுத்தி சக மீனவர்களோடு கடலில் இறங்கி போராடியிருக்கிறார். மீனவ பெண்களிடையே சுய உதவிக்குழு உள்ளிட்ட குழுக்கள் அமைத்ததில் சாந்திக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

விருது பெற்று சாந்தி பேசும்போது, “அறிவு, ஆற்றலுடையவர்கள் பெண்கள். அனைத்து பெண்களுக்கும் அழகுண்டு, கலையுண்டு, வீரமுண்டு. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உஜாலா நிறுவனத்துக்கும், ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கும் மீனவ சமுதாயத்தின் சார்பாகவும், அனைத்து பெண்கள் சார்பாகவும் நன்றி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x