Published : 17 Mar 2025 06:10 AM
Last Updated : 17 Mar 2025 06:10 AM
சென்னை: குறுகிய, நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வாகனம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் செயல்படுகிறது. இதனால், பகுதி முழுவதும் தபால்கள், பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், குறுகிய மற்றும் நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் தபால்கள், பார்சல்களை திறமையாக கொண்டு செல்ல ஏதுவாக புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக தபால்கள், பார்சல்களை கொண்டு செல்ல இதில் இடவசதி உள்ளது.
நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் வலுவான கட்டமைப்புடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 தரத்தில் மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வாகனமாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு அஞ்சலக வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவையில் இந்த புதிய வாகனம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. சென்னை எம்எம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் கொடியசைத்து, இந்த வாகன சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மற்றும் அஞ்சல் மோட்டார் சேவையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறுகிய மற்றும் நெரிசலான பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு இந்த வாகனம் சேவை செய்யும்.
தொலைதூர பகுதிகளில் அஞ்சல் போக்குவரத்து சேவைக்கான தொடர்பை மேம்படுத்துவதையும், உரிய நேரத்தில் அஞ்சல் சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT