Published : 17 Mar 2025 05:14 AM
Last Updated : 17 Mar 2025 05:14 AM
‘‘மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ பறித்து விடக்கூடாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’’ என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில், நிறுவன இடஒதுக்கீட்டை வைத்துக் கொள்ளலாம். ஆனால், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்து கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்தும், அத்தீர்ப்பை சரி செய்திடும் வகையில், உரிய அரசியல் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வலியுறுத்தியும், மருத்துவக் கல்வியில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதை கைவிடக் கோரியும், சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் த. அறம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் எம் .அஜய் முகர்ஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் திணித்து வரும் அதன் கொள்கைகள், அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பாக உள்ளன. இந்தியா முழுவதிலும் ஒரு ஒற்றை மொழியை திணிக்க வேண்டும். அது இந்தியாகவோ அல்லது சமஸ்கிருதமாகவோ இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பெரு முயற்சி எடுத்து வருகிறது. இச்சூழலில், மத்திய அரசு எல்லா தளங்களிலும், மாநில உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், தொகுதி மறுவரைவு என்ற பெயரால் தமிழகம் உட்பட தென்மாநிலங்களின் உரிமையை, அவர்களின் அரசியல் தகுதியை குறைக்கும் வகையில் இன்றைக்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் கல்வியை வணிகமயம் ஆக்குவதற்கும், தனியார்மயம் ஆக்குவதற்கும் மத்திய அரசு போராடுகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க வேண்டும் என முயற்சி எடுக்கப்படுகிறது.
சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தற்போது எடுத்துள்ள பிரச்சினை தமிழகத்துக்கு மட்டுமான பிரச்சினை கிடையாது. அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சினை. மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்குவது, மருத்துவக் கல்வியில் மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டை பறிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் மருத்துவ துறையில் தனியார்மயம் செய்யக் கூடாது. மருத்துவக் கல்வியில் தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ பறித்து விடக் கூடாது. இது மாநில உரிமைகளை பறிப்பதாகும். இதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ராஜா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...