Published : 16 Mar 2025 04:55 PM
Last Updated : 16 Mar 2025 04:55 PM
சென்னை: “கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது திராவிட முன்னேற்ற கழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...