Last Updated : 12 Jul, 2018 07:19 PM

 

Published : 12 Jul 2018 07:19 PM
Last Updated : 12 Jul 2018 07:19 PM

புதுச்சேரியில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தர ஒப்பந்தம்

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம், அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அறக்கட்டளை துணைத்தலைவர் சன்சலாபதி தாசாவும், கல்வித்துறை செயலர் அன்பரசுவும் கையெழுத்திட்டனர். முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டனர்.

இது தொடர்பாக துணைத்தலைவர் சன்சலாபதி தாசா கூறுகையில், "வரும் ஜூன் மாதம் இத்திட்டம் புதுச்சேரியில் தொடங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முழுமையான ஊட்டச்சத்து பொருந்திய சுகாதாரமான, சுவையான மதிய உணவு மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 மாநிலங்களில் இத்திட்டம் உள்ளது. 13-வதாக புதுச்சேரியில் தொடங்குகிறோம்" என்றார்.

முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையல் கூடம் அட்சய பாத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வாரத்தில் 2 நாட்கள் சாம்பார் சாதமும், மீதமுள்ள 3 நாட்களுக்கு புளியோதரை, தக்காளி சாதம், வெஜிடபுள் புலவு போன்ற கலவை சாதங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மதிய உணவில் உருளைக்கிழங்கு பொறியல், சுண்டல், இனிப்பு பொங்கல், தயிர், பாயசம் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் வழங்கப்பட உள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மதிய உணவு தயாரிப்பதற்கான எந்தவிதமான கொள்முதல் செலவும், உணவு விநியோகம் தொடர்பான செலவினங்களும் புதுச்சேரி அரசுக்கு இருக்காது" என்று தெரிவித்தார்.

கல்வியமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், "மத்திய அரசு மதிய உணவுத்திட்டத்துக்கு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே அட்சய பாத்ரா அறக்கட்டளைக்கு அளிக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சேமிப்பாகும். தற்போது வழங்கப்படும் முட்டை தொடர்ந்து தரப்படும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x