Published : 16 Mar 2025 04:35 PM
Last Updated : 16 Mar 2025 04:35 PM
மதுரை: நாடு முழுவதும் வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை கூண்டோடு மாற்றி விட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன், அடமானக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வங்கியின் குழு வழக்கறிஞர் மற்றும் குழு பொறியாளரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். கடன் கேட்கப்படும் சொத்தின் உண்மை தன்மை குறித்து வழக்கறிஞரும், சொத்தின் மதிப்பு குறித்து பொறியாளரும் ஆய்வு செய்து வங்கிக்கு பரிந்துரை அனுப்புவர்.
இவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும். இதேபோல் கடன் முடிந்து வாடிக்கையாளருக்கு அடமானமாக வைக்கப்பட்ட சொத்து ஆவணங்களை திரும்ப வழங்கும் போது வழக்கறிஞரிடம் அறிக்கை கேட்கப்படும். வங்கி கடன் விவகாரங்களில் வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
தற்போது வங்கி குழுக்களில் இடம் பெற்றிருக்கும் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் பல ஆண்டுகளாக அதே வங்கி குழுவில் இருப்பதால் கடன் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் வங்கி குழுக்களில் உள்ள வழக்கறிஞர்கள், பொறியாளர்களை கூண்டோடு மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்க கோரிக்கை எழுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் எம்.ராஜரத்தினம் சமீபத்தில் டில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறையில் பெரியளவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்குமான உறவு சரியாக இல்லை. இதற்கு வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் முக்கிய காரணமாக உள்ளனர்.
வீட்டுக்கடன் உட்பட பல்வேறு கடன்களை கேட்டுகும் போது அதை ஆய்வு செய்வதற்காக வங்கி குழு வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்களாக தற்போது இருப்பவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வங்கியில் உள்ளனர். இவர்கள் வங்கி மேலாளர்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் இவர்களுக்கு பணம் கொடுத்தால் கடன் கிடைக்கும் நிலை உள்ளது. உண்மையில் கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான தொகை கடனாக கிடைப்பதில்லை. இல்லாத ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால் உண்மையில் கடன் தேவைப்படுவோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் தற்போதுள்ள வங்கி குழு வழக்கறிஞர்கள், பொறியாளர்களை நீக்க வேண்டும். இவர்களுக்கு மீண்டும் வங்கிக்குழுவில் இடம் அளிக்கக்கூடாது. இவர்களுக்கு பதிலாக தகுதித் தேர்வு நடத்தி புதிய வழக்கறிஞர்கள், பொறியாளர்களை வங்கிக்குழுவில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் உண்மையான பயணிகளுக்கு வங்கி கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளேன். மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...