Last Updated : 16 Mar, 2025 03:29 PM

1  

Published : 16 Mar 2025 03:29 PM
Last Updated : 16 Mar 2025 03:29 PM

‘மதுபான தொழிற்சாலை அனுமதியில் கூட்டுக்கொள்ளை’ - நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்கொள்கை அடிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை இந்தியா முழுவதும், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது, புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் அதை வரவிடாமல் நாங்கள் தடுத்தோம். தற்போதுள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மோடிக்கு அடிபணிந்து, புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து மும்மொழி கொள்கை மூலம் இந்தியை நேரடியாக திணிக்கிறார்கள்.

2026-ல் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மும்மொழிக் கொள்கையை நாங்கள் நிராகரித்து இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். தமிழ் தாய்மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி இதுதான் எங்களின் மொழிக் கொள்கை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம் ஸ்ரீ என்ற பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 2140 கோடியை கொடுக்காமல் தடுத்து, மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தாவிட்டால், நிதியைத் தர மாட்டோம் என்று மிகவும் ஏளனத்தோடும், மமதையோடும் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் மாநில பட்ஜெட்டில், மத்திய அரசு ஒதுக்க மறுத்த நிதியை மாநில அரசே ஒதுக்கி கொடுத்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் நான் இரண்டு, மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை, 2 கிலோ கோதுமை இலவசம் வரவேற்றிருந்தேன்.

ஆனால் இதனை நிறைவேற்ற மாட்டார்கள். வெறும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு மார்தட்டி கொள்கிறார்கள். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பெண்களுக்கான பிங்க் பேருந்து, பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 50 அயிரம் டெபாசிட் திட்டம் முழுமையாக நிறவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வெறும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். எந்த திட்டமும் முழுமையாக மக்களிடம் செல்லவில்லை. எல்லாம் அறைகுறைதான். ஏப்ரல் மாதத்தில் இருந்து மகளிருக்கு உயர்த்தபட்ட ரூ.2500, மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை ரூ.1000 கொடுப்பீர்களா?

அறிவித்த திட்டங்களை கிடப்பில் போடுவதுதான் ரங்கசாமிக்கு வாடிக்கை. இது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. கண்டிப்பாக முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. அது சாத்தியமில்லை. காரணம் நிதிப்பற்றாக்குறை. வருவாய் பெருகவில்லை. மத்திய அரசிடம் இருந்து பெறும் மானியமே ரூ.2300 கோடிதான். வெளி மார்க்கெட்டில் ரூ.2100 கோடி கடன் வாங்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் துணைநிலை ஆளுநர் தனது உரையில் நீண்டதொரு பட்டியல் கொடுத்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நகர்ப்புற வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.4700, ரூ.540 கோடிக்கு கூட்டு குடிநீர் திட்டம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் இருந்து ரூ.1700 கோடி கடனாக பெறப்போகிறார்கள். ஏற்கெனவே மாநில அரசு ரூ.12 ஆயிரத்து 800 கோடி கடன்சுமையில் இருக்கிறது. எங்கள் ஆட்சியில் அது ரூ.8 ஆயிரம் கோடிதான். இந்த 4 ஆண்டுகளில் ரூ.4,800 கோடி அதிகரித்துள்து.

துணைநிலை ஆளுநர் சொன்ன திட்டங்களை கணக்கில் எடுத்தால் அரசு வாங்கும் கடனோடு மொத்தம் ரூ.20 அயிரத்து 800 கோடி கடன்சுமை புதுச்சேரி மக்கள் தலையில்தான் வைக்கிறார்கள். இப்படி கடனை வாங்கிவிட்டு எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதுதான் இவர்களின் வேலை. இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டாம். 70 சதவீதம் அரசு ஊழியர் ஊதியம், பொதுத்துறை மானியம் என்று சென்றுவிடுகிறது. மீதமுள்ள30 சதவீதத்தில் நீங்கள் சொல்லும் இதையெல்லாம் செய்ய முடியாது.

மாணவர்களுக்கு கொடுக்கும் முட்டையில் ஊழல் நடக்கிறது, ஒரு முட்டை 45 கிராம்தான் என்ற குறைவான அளவில் கொடுத்து, முட்டை கொள்முதலில் ஊழல் நடக்கிறது. அரிசியை ரேஷன் கடையில் வைத்து கொடுக்காமல் வாகனத்தில் முச்சந்தியில் வைத்து, விநியோகம் செய்கிறார்கள். ரேஷன் கடை என்ன ஆனது, கேவலமான ஆட்சி நடக்கிறது. காலத்தோடு எதையும் செய்யாத அரசு. புதிய பேருந்து நிலையம் கடையை முதல்வர் தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்கவே காலதாமதம் செய்கிறார். இதில் இருந்தே ஊழலுக்கு இந்த ஆட்சி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x