Published : 15 Mar 2025 05:29 PM
Last Updated : 15 Mar 2025 05:29 PM
தென்காசி: “தமிழக அரசின் வேளாண் பட்ஜெட், விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை,” என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகள் பின்பற்றிய அதே பட்டியல், அதே வாசகங்கள் மறு வாசிப்பாக பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டுள்ளது.
விதை உற்பத்தி தேவையில் 18 சதவீதம் மட்டும்தான் உற்பத்தி செய்வது கொள்கையாக இருப்பதை 40 சதவீதமாக மாற்ற வலியுறுத்தினோம். அதுகுறித்த அறிவிப்பு இல்லை. 7 இடங்களில் விதை சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடங்க இருப்பதாகவும், ரூ.250 கோடி விதை உற்பத்திக்காக செலவிட இருப்பதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். சொட்டுநீர் பாசனத்துக்கு 1168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம். அறிவிப்புகள் வாசிக்கப்படுகிறதே தவிர, அதற்கான தொகை விடுவிக்கப்படாததால் கடந்த 4 ஆண்டுகளாக வேளாண் பட்ஜெட்டால் பயன்பெற முடியாத நிலை உள்ளது.
இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க 5 ஆயிரம் இயந்திரங்கள் தருவதற்கான அறிவிப்பை வரவேற்கிறோம். இந்த அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும். 2925 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வார போவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த திட்ட அறிவிப்புக்கும், தூர்வாருவதற்கு ஒதுக்கப்படும் நிதியும் எந்த வகையிலும் பொருத்தமில்லாமல் உள்ளது.
விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அது ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீட்டால் அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் சென்றடையாத நிலை உள்ளது. தமிழக அரசு தனி காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்க எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை பிரீமியத்தை செலுத்தும் வகையில் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி நிதி கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதற்கு வழிவகுக்கிறதே தவிர பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற முடியவில்லை.
கொள்முதல் உத்தரவாரம் இருந்ததால்தான் நெல்லுக்கான உற்பத்தி திறன் அதிகரித்தது. நடப்பாண்டு கொள்முதலை தனியாருக்கு தாரைவார்த்ததால் இனி நெல் உற்பத்தியும் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தது. 4 ஆண்டுகள் கடந்தும் இதை செயல்படுத்தவில்லை. மதுரையை தலைமையிடமாக கொண்டு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.
மத்திய அரசின் கொள்கையால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நிலைகுலைந்து போய் கடன் கொடுப்பதற்கான தகுதியை இழந்துவிட்டன. இது குறித்து எந்த சீர்திருத்த நடவடிக்கைகளும் அறிவிக்கப்படவில்லை. நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டுவந்ததால் விளைநிலங்கள் கார்ப்பரேட்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் மூலம் விளைநிலங்கள் மட்டுமின்றி அவற்றுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரிக்க வழிவகுத்து ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் கார்ப்பரேட்களுக்கு அடிமைப்படுத்திவிட்டனர். இதனை திரும்ப பெறுவார்கள் என எதிர்பார்த்தோம் அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
விளம்பர பட்ஜெட்டாக, காகித பட்ஜெட்டாக உள்ளதே தவிர, வாசிக்கப்படும் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விவசாய வளர்ச்சிக்கோ, மேம்பாட்டுக்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏமாற்றுகிற பட்ஜெட்டாக விவசாயிகளுக்கு அமைந்துள்ளன. இயற்கை வளங்கள் அழிப்பால் வவனவிலங்குகள் விளைநிலங்கலும், குடியிருப்புகளிலும் புகுந்து சேதப்படுத்துகின்றன. இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment