Published : 15 Jul 2018 02:26 AM
Last Updated : 15 Jul 2018 02:26 AM

வடசென்னை ரசிகர்களை கவர்ந்த உலகக்கோப்பை கால்பந்து; இறுதிப் போட்டியை அகன்ற திரையில் காண ஏற்பாடு: வியாசர்பாடியில் கோலாகல கொண்டாட்டம்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அகன்ற திரையில் கண்டு களிக்க வடசென்னை கால்பந்து ரசிகர்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

கால்பந்து விளையாட்டுக்கும் வட சென்னைக்கும் நெருக்கமான உறவு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் அருகிவிட்ட நிலையில், எங்கு பார்த்தாலும் சிறுவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் மட்டை, பந்துடன் வலம் வருகின்றனர். இதற்கு விதிவிலக்காக வட சென்னையில் கால்பந்து விளையாட்டு பிரபலமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் கால்பந்து விளையாட்டு மட்டுமே பிரதானமாக உள்ளது. அங்குள்ள குழந்தைகளைச் செல்லமாக ரொனால்டோ, மெஸ்ஸி என்று உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர்களின் பெயரில்தான் அழைக்கிறார்கள். கிட்டத்தட்ட வட சென்னையின் அடையாளமாகவே கால்பந்து மாறிவிட்டது. ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களும் வட சென்னை மற்றும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன.

வட சென்னையில் உள்ள வியாசர்பாடி முல்லைநகர் திடல், பக்தவத்சலம் காலனி திடல், கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் திடல், புளியந்தோப்பு கன்னிகாபுரம் திடல் ஆகியவை கால்பந்துக்குப் புகழ் பெற்றவை. இத்திடல்களில் விளையாடிய பலர், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியதிலிருந்து, சென்னையில், அதிக கால்பந்து ரசிகர்களைக் கொண்டுள்ள வட சென்னை கோலாகலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற லீக் மற்றும் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இறுதிப் போட்டி ரஷ்ய தலைநகரம் மாஸ்கோவில் இந்திய நேரப்படி இன்று இரவு நடக்கிறது. இதில் பிரான்ஸ் அணி, குரோஷிய அணியை எதிர்கொள்கிறது. இதில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றுவது யார் என்பதை அறிந்துக்கொள்வதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

வியாசர்பாடியில் உள்ள ‘குடிசைப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம்’ சார்பில் வியாசர்பாடி முல்லைநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் அகன்ற திரையில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ கூறும்போது, “வியாசர்பாடி பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுதல் மாதா ஆலயம் கட்டப்பட்டது. அதன் அருட்தந்தைகளாக இருந்த மந்தோனி, ஸ்லூஸ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு உணவிட்டு, கால்பந்து விளையாட்டை கற்றுக்கொடுத்தனர். அங்கு பலர் சென்னை துறைமுகத் தொழிலாளிகளாக இருந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பிரிவில் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதனால் கால்பந்து விளையாட்டு மீது வட சென்னை மக்களுக்கு பற்று ஏற்பட்டது. அப்போது தொடங்கிய உறவு, இன்றும் நீடிக்கிறது” என்றார்.

‘குடிசைப்பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மையம்’ தலைவர் தங்கராஜ் கூறியதாவது:

வட சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து விளையாடப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்க வேண்டுமென்றால் போராட்ட குணம், தைரியம், தன்னம்பிக்கை, உடல் பலம் அவசியம். இவை அனைத்தும் வட சென்னை மக்களிடம் இருப்பதால், வட சென்னையுடன் கால்பந்து ஒன்றிவிட்டது. குழந்தைகளிடம் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்தோம். இதைத் தொடர்ந்து 4-வது முறையாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று ஹாரிங்டன் கால்பந்து அகாடெமி சார்பில் ஐசிஎஃப் தெற்கு காலனியில் உள்ள பன்நோக்கு விளையாட்டு வளாகத்தில் மாலை 4.45 மணிக்கு காட்சி போட்டியும், இரவு 7.30 மணிக்கு அகண்ட திரையில் இறுதிப் போட்டி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

மேலும், பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு சங்கங்கள் சார்பிலும் வெவ்வேறு இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x