Published : 15 Mar 2025 02:33 PM
Last Updated : 15 Mar 2025 02:33 PM

மத்திய அரசு Vs தமிழக அரசு - கடன் சுமையை முன்வைத்து அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

சென்னை: “11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு பெற்ற கடன் ரூ.130 லட்சம் கோடி. தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பதிலடி தந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நிதிநிலை அறிக்கையின் மீது கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு குஜராத் மாநிலத்தோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

ஆனால், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசியல் சமூக ஆய்வாளர் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட் என்பவர் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையின்படி, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை இடைவெளி, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் விகிதம் உள்ளிட்ட பல விஷயங்களில் குஜராத் மாநிலம் பின்தங்கிய மாநிலமாக பிஹாருக்கு அருகில் உள்ளது.

கல்வி விகிதம் பெரிதாக இல்லை. கல்வியில் குறைந்த முதலீடுகள் காரணமாக குஜராத்தில் சமத்துவமின்மை நீடித்து வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக குஜராத் மாநிலம் செலவிடுவது மிக மிக குறைவாக உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டை நெருங்கக் கூட முடியாது. ஆனால், இந்தியாவில் ஒரு சிறந்த மாடல் என்று இருந்தால் அது தமிழ்நாடு தான் என்று நாட்டில் உள்ள பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். வறுமையை முற்றிலும் ஒழித்து அதிவேகத்தில் தொழில்மயமாக்கி, அதிக சேவைகள் தொழில் துறையிலிருந்து பெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பாஜக அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார். 1947 முதல் 2014 வரை இந்தியாவின் மொத்த கடன் 67 ஆண்டுகளில் ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 2025-இல் 11 ஆண்டுகளில் ரூ.185 லட்சம் கோடி கடனாக உயர்ந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் கடன் 89.6 சதவிகிதமாகி திவாலான நிலையில் உள்ளது. அதேபோல, ஒவ்வொரு இந்தியரின் மீதும் ரூ.1.5 லட்சம் கடன் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் ரூபாய் 14 லட்சம் கோடி கடன் வாங்கப் போவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதைத் தவிர வெளிநாட்டுக் கடன் 6 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. கடந்த 67 ஆண்டுகளில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்றிய அரசுகள் பெற்ற மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. 11 ஆண்டுகளில் பாஜக அரசு பெற்ற கடன் ரூபாய் 130 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் கடனைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன உரிமை இருக்கிறது?

மேலும், 2021-இல் அ.தி.மு.க. ஆட்சி வைத்து விட்டு போன கடன் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி. இந்நிலையில்தான் திமுக ஆட்சி பொறுப்பினை ஏற்றதை எவரும் மறந்திட இயலாது. தமிழ்நாட்டிலிருந்து 2024-25 இல் ஒன்றிய அரசு நேரடி வரி மூலமாக பெற்றது ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி. அதேபோல, ஜனவரி வரை மொத்தம் பெற்ற ஜிஎஸ்டி வரி ரூபாய் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி. ஆனால், இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் வரிகளில் தமிழ்நாட்டின் பங்காக ரூபாய் 58 ஆயிரத்து 22 கோடி தான் வழங்கியிருக்கிறது. நாம் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 29 பைசா தான் திரும்ப வருகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசத்திற்கு 2 ரூபாய் 13 பைசா செல்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட கடன் வரம்புக்கு உட்பட்டுதான் நிதி நிலைமை இருக்கிறது. ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 46,760 கோடி. ஒன்றிய அரசு நாடு முழுவதற்கும் கடந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ஒதுக்கிய தொகை ரூபாய் 78,572 கோடி. ஆனால், புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் ஏற்க மறுத்த காரணத்தால் சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடியையும், பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய ரூபாய் 2000 கோடியையும் ஒதுக்காமல் பா.ஜ.க. ஆட்சி செய்கிற குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அந்த தொகையை ஒன்றிய அரசு பாரபட்சமாக திருப்பி விட்டிருக்கிறது.

கடும் புயலினால் சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 38,000 கோடி நிவாரண தொகை கேட்டு தமிழ்நாடு முதல்வர் பலமுறை கடிதம் எழுதினார். அதற்கு பலனளிக்காத நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் பங்காக வர வேண்டிய ரூபாய் 276 கோடியை தான் ஒன்றிய அரசு விடுவித்ததே தவிர, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சல்லிக்காசு கூட விடுவிக்கவில்லை.

தமிழ்நாடு முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில் கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கை எதிர்கொள்கிற வகையில், தன் சொந்த நிதியிலிருந்து கல்வித்துறை உள்ளிட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மிகுந்த துணிவுடன் மேற்கொண்டு வருகிறது.

எனவே, தமிழ்நாட்டு நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு கொடுத்த வாக்குறுதியையும், சட்டப் பாதுகாப்பையும் மீறி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்கிற முயற்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிற அண்ணாமலைக்கு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.

தமிழக பட்ஜெட் சமர்ப்பித்ததன் மூலம், மக்களின் அமோக ஆதரவை சீர்குலைக்கும் நோக்கத்தில், அதே நாளில் அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து அவதூறு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஏதாவது ஆதாரம் இருந்தால் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர, அதற்கு முன்பாகவே அமலாக்கத்துறையின் அறிக்கை ஊடகங்களின் மூலம் வெளியிடுவதற்கு அண்ணாமலை ஒரு தூண்டு கோலாக அமைந்திருக்கிறார்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மக்கள் நலன் சார்ந்த, மக்களின் பேராதரவுடன் செயல்படுகிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை சீர்குலைக்க எத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகள் எடுத்தாலும் அதில் அண்ணாமலை வெற்றி பெற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x