Published : 15 Mar 2025 05:57 AM
Last Updated : 15 Mar 2025 05:57 AM

தமிழக பட்ஜெட் 2025 சிறப்பு அம்சங்கள்: ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க திட்டம்!

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

வரும் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய அவர் 12.10 மணிக்கு நிறைவு செய்தார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்ததாவது:

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகம் விரைவாக வளர்ச்சியடைய விரிவான செயல் திட்டங்களை நாம் உடனடியாக உருவாக்க வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது. இந்த பட்ஜெட்டை மக்கள் நலன் காக்கும் கருவியாக பயன்படுத்தி, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்க முயற்சி எடுத்துள்ளோம்.

கரோனா பரவலின்போது, தமிழக அரசின் நிதிநிலையில் ஏற்பட்ட பெரும் சுமை காரணமாக, அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதை மீண்டும் செயல்படுத்த அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்து, முதல்வரின் வழிகாட்டுதல்படி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து பண பலன் பெறும் நடைமுறை வரும் 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்கான அரசாணைகள் மீண்டும் பிறப்பிக்கப்படும். இதன்மூலம் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள்.

சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பத்திலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில், வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், பெண்கள் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்கான மானிய உதவிக்காக இந்த ஆண்டில் ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.

அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, அடுத்த 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இத்திட்டத்துக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு

* தமிழ் வளர்ச்சிக்காக, திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்ச் செம்மொழியின் பெருமையை உலகத் தமிழர் மத்தியில் பரவச்செய்ய ஆண்டுதோறும் ரூ.1 கோடியில் ‘உலகத் தமிழ் ஒலிம்பியாட்’ போட்டிகள் நடத்தப்படும்.

* ஈரோட்டில் கொடுமணல் அகழாய்வுகளை மையப்படுத்தி ரூ.22 கோடியில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் ரூ.21 கோடியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், வரும் ஆண்டில் ரூ.3,500 கோடியில் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் வரும் ஆண்டில் ரூ.2,200 கோடியில் 6,100 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும்.

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் 6,483 கி.மீ. நீள சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.3,750 கோடி ஒதுக்கப்படும்.

* சென்னை வேளச்சேரி பிரதான சாலை - குருநானக் கல்லூரி சந்திப்பு வரை ரூ.310 கோடியில் 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படும்.

* புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.6,668 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான வசதிகளுடன் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு புதிய நகரத்தை டிட்கோ நிறுவனம் உருவாக்கும்.

* வரும் நிதி ஆண்டில் 10 ஆயிரம் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும். அவர்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வரை வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

* முதல்வரின் காலை உணவு திட்டம், மேலும் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* வரும் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

* சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும்.

* குடிமைப்பணி தேர்வில் நேர்காணலுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழகத்தில் அதை முழுவதுமாக நீக்கவும் 14 வயதுள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக எச்பிவி தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

* ரூ.500 கோடி மதிப்பில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் என்ற 5 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும். ஓசூரை ஒட்டி உலகத் தரம் வாய்ந்த அறிவுசார் பெருவழித்தடம் உருவாக்கப்படும்.

* 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூர், கடலூரில் ரூ.250 கோடியில் காலணி தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

* அனைத்து மாநகராட்சிகளிலும் 30 இடங்களில் தலா ரூ.5 கோடியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.

* சென்னை அருகே கோவளம் உபவடிநில பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.

* வெள்ளிமலையில் 1,100 மெகாவாட், ஆழியாறில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் நிலையங்கள் ரூ.11,721 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை வெளியிடப்படும்.

* பூநாரை பறவைகள் சரணாலயமாக தனுஷ்கோடி பகுதி அறிவிக்கப்படும்.

* மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் மதுரையில் ரூ.11,368 கோடியிலும், கோவையில் ரூ.10,470 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்படும்.

* தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்துக்கும், கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றத்துக்கு 6 கி.மீ. தூரத்துக்கும் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர், கோவை - சேலம் இடையே மித அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* கால்நடை வளத்தை அதிகரிக்க புதிய இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்.

* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பழுதடைந்த 5,256 குடியிருப்புகள் ரூ.1,051 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும்.

* சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் - உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் 14.2 கிமீ நீளத்துக்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

* தமிழக அரசு துறைகளில் நடப்பு நிதி ஆண்டில் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல, வரும் நிதி ஆண்டில் மேலும் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும்.

* ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த கடன் வழங்கும் அமைப்பு தொழில்நுட்பத்தை தமிழக அரசு பல்வேறு வங்கிகள் மூலம் தமிழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x