Published : 15 Mar 2025 05:38 AM
Last Updated : 15 Mar 2025 05:38 AM

தமிழக அரசின் கடன் ரூ.9 லட்சம் கோடி: நிதி துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்

பட்ஜெட் குறித்து விளக்கிய நிதி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.9 லட்சம் கோடி வரை உள்ளது. தொகையை பார்க்கும்போது முதல் இடத்தில் இருப்பதாக தோன்றினாலும், நிதிக் குழு பரிந்துரை செய்யும் வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம் என்று நிதி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி துறை செயலர் த.உதயச்சந்திரன் கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்கு 9 சதவீதம். பொருளாதார ரீதியாக தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ந்து வருகிறோம். பொருளாதாரத்தில் 28 சதவீதம் வரை ஒரு மாநிலம் கடன் வாங்க நிதிக் குழு பரிந்துரை செய்கிறது. அந்த வரம்புக்குள்தான் கடன் வாங்குகிறோம். தொகையை பார்க்கும்போது முதல் இடத்தில் இருப்பதாக தோன்றும். ஆனால், பொருளாதாரத்துக்கு ஏற்ப கடன் வாங்கும் விஷயத்தில் தமிழகம் மோசமான நிலையில் இல்லை. ரூ.10 ஆயிரம் சம்பளம் பெறுபவர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்குவதற்கும், ரூ.1 லட்சம் சம்பளம் பெறுபவர் அதே தொகையை கடன் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது.

தேவையான நேரத்தில் நிதி ஒதுக்குகிறோம். துறைகளுக்கு விடுவிக்கப்பட்டு பயன்படுத்தாத நிதி ரூ.11 ஆயிரம் கோடியை திரும்ப பெற்றுள்ளோம். இவ்வாறான நிதி மேலாண்மை மூலம் கடந்த ஆண்டு ரூ.3,600 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளோம். நடப்பு ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடி குறைவாக கடன் வாங்குவோம்.

தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.9 லட்சம் கோடி வரை இருக்கும். வரும் நாட்களில் ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளோம். இது குறைய வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கும் வளர்ச்சி என்பது 0.66 சதவீதம் என்ற அளவில் தொடர்கிறது. வருவாய் பற்றாக்குறை தொடர்ச்சியாக குறைந்து 2025-26-ம் ஆண்டில் 1.17 சதவீதமாக இருக்கும். கடந்த ஆண்டு ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையாக மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் நலத்திட்ட உதவிகள் வராதபோதே நடப்பு ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறோம். மேலும் இது ரூ.41 ஆயிரம் கோடி அளவுக்கு குறையும். ஜல்ஜீவன் உள்ளிட்ட திட்டங்களில் நினைத்த அளவுக்கு தொகை வரவில்லை. அது கிடைத்திருந்தால் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும்.

மூலதன செலவு ரூ.46 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ரூ.57 ஆயிரம் கோடி செலவிட முடியும் என நம்புகிறோம். மாநில சொந்த வரிவருவாய் 75 சதவீதம். மத்திய அரசிடம் 24.7 சதவீதம் பெறுகிறோம். இதில், மத்தியில் இருந்து நிதி குறைவாக வருவதை அனைவரும் அறிவோம். நாட்டின் சராசரி ஜிஎஸ்டி வளர்ச்சியை ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி அதிகம். மோட்டார் வாகன வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது.

டாஸ்மாக் வருவாய் 8% உயர்வு: டாஸ்மாக் வருவாய் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் சேவையில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். செமி கண்டக்டர் துறையில் வடிவமைப்பு, பரிசோதனை உள்ளிட்ட எந்த பிரிவில் கவனம் செலுத்தலாம் என ஆலோசித்து வருகிறோம். 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் வகையில், வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துகிறோம். எனினும், இதில் உலக அளவில் ஏற்படும் மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு ரூ.2,152 கோடியை தராதபோதும் எந்த குறையுமின்றி பள்ளிக்கல்வி துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். மிக பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளதால் மூலதன செலவு அதிகமாக இருக்கிறது. வரி வருவாய் பகிர்வில் நமக்கான சதவீதத்தில் உயர்வு ஏற்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும். கரோனா பரவலின்போது, செமி கண்டக்டர் சிப்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மடிக்கணினி கொடுக்கவில்லை. தற்போது கொள்கை முடிவு எடுத்து மீண்டும் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x