Published : 15 Mar 2025 02:23 AM
Last Updated : 15 Mar 2025 02:23 AM

ரூ.2200 கோடியில் 6100 கிமீ சாலை மேம்பாடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025-26 ஆண்டுக்கு 6100 கிமீ நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2200 கோடியில் மேம்படுத்தப்படும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் தொடர் பராமரிப்புக்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்க முடிவு செய்து, 2025-26 ஆண்டுக்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும்.

பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் ஊரக பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காக 2001-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக, 2025- 26 ஆண்டில் ரூ.600 கோடியில் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

ஊரகப் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் நோக்கத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3796 நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. அதை உடனே விடுவித்திட தமிழக அரசு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மொத்தத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.29456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,687 கோடி: தமிழக பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,687 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4132 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 6,483 கிமீ நீளமுள்ள சாலைகள் ரூ.3,750 கோடியில் தரம் உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்கீழ், சென்னை மாநகராட்சியில் ரூ.486 கோடியில் 570 கிமீ சாலைகள், கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியிலும், மதுரை மாநகராட்சியில் ரூ.130 கோடியிலும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3,450 கோடியில் தொடங்கப்படும். சென்னையில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் ரூ.88 கோடியில் உருவாக்கப்படும்.

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள மாநகராட்சி பகுதிகளில் இருந்து உருவாகும் கழிவுநீர், ஆற்றில் நேரடியாக கலப்பதை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள் உள்ளிட்டவை அமைக்கும் ஆற்றங்கரை மேம்பாட்டு பணிகள் திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை, திருநெல்வேலி மாநகராட்சிகளில் மொத்தம் ரூ.400 கோடியில் தொடங்கப்படும்.

சென்னையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும், 'முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்' ரூ.2,423 கோடியில் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்கீழ் உள்ள 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.675 கோடியில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x