Published : 14 Mar 2025 12:10 AM
Last Updated : 14 Mar 2025 12:10 AM

மத நல்லிணக்க மாநாட்டில் நீதித்துறை மீது விமர்சனம்: மதுரை எம்.பி. வெங்கடேசனுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர முடிவு

சோலைக்கண்ணன், ஆதிசேஷன்

மதுரையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் நீதித்துறையை விமர்சனம் செய்ததற்காக மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.

கடந்த ஞாயிறு (மார்ச் 9) அன்று மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷணய்யர் அரங்கில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க மாநாட்டு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதிமுக பொருளாளர் செந்தில் அதிபர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுப.உதயகுமார், எஸ்டிபிஐ தலைவர் முபாரக், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உட்பட பலர் பேசினர்.

இதில் சு.வெங்கடேசன் எம்.பி. பேசும்போது நீதித்துறையை விமர்சித்து தெரிவித்த கருத்துக்களால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அவர் பேசுகையில், மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது பழங்காநத்தத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அனைத்துக் கட்சிகள், எம்.பி, எம்எல்ஏக்கள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்கும் மத நலல்லிணக்க மாநாட்டை பொதுவெளியில் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தீயை பற்ற வைப்பவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என்று சொன்னால், உன்னைப் போல் முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லை. தீயை பற்ற வைப்பவர் அழிவு சக்தி, அணைப்பவன் காக்கும் சக்தி. உனக்கு தேவையான தீர்ப்பை எழுதிக் கொடுத்துவிட்டு நாளை ஓய்வு பெற்ற பின் ஒரு மாநிலத்தின் ஆளுநராக அமர்வது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம். எந்த துறை என்றாலும் எந்த உயரிய பதவியில் இருந்தாலும் எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன்தான், என்றார்.

மத நல்லிணக்க மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. நீதித்துறையை விமர்சித்து பேசியதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கூறுகையில், மதுரை மத நல்லிணக்க மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி., மாவட்ட நிர்வாகத்தையும், இந்து அமைப்பினரையும் மிரட்டும் வகையிலும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். எம்பியான அவர், திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதியையும், நீதிமன்றத்தையும் ஒருமையில் பேசி அவமதித்துள்ளார். இது அவர் எம்.பி.யாக பதவியேற்கும் போது அரசியலமைப்பு சட்டப்படி எடுத்துக்கொண்ட பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிரானது ஆகும். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான எம்.பி.யின் பேச்சு நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதற்காக வெங்கடேசன் எம்.பி. மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஹரி.ஆதிசேஷன் கூறுகையில், மத நல்லிணக்க மாநாட்டில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், நீதிபதியை மிகவும் அவமரியாதையாகவும், அவர் தீர்ப்பை கொச்சைப்படுத்தியும் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. அவர் நீதிபதியைம் கடும் சொற்களால் விமர்சித்தது அநாகரிகத்தின் உச்சம். நீதிபதியின் தீர்ப்பு பிற்காலத்தில் கவர்னர் பதவிக்கான அச்சாரம் எனக் கூறியது மிகவும் கீழ்த்தரமானது. முருக பக்தர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான தீர்ப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தது எதிர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே மதுரை எம்.பி. நீதிபதியையும், அவர் தீர்ப்பையும் கடுமையாக அவமதித்துள்ளார். இதற்காக வெங்கடேசன் எம்.பி. மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், நாங்களும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x