Published : 13 Mar 2025 03:13 PM
Last Updated : 13 Mar 2025 03:13 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினர். உறுப்பினர்கள் புயல் விவகார பாதிப்பு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் பேசியதற்கு, பேரவைத்தலைவர் இருக்கையில் இருந்த ராஜவேலு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மட்டும் பேசுங்கள் என அறிவுறுத்தினார்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: புயல் பாதிப்பு தமிழகத்தில் இல்லையா? கூட்டணி கட்சியான காங்கிரஸ்தான் இதை கேட்டதா?
வைத்தியநாதன் (காங்கிரஸ்): ஏன் தமிழகம் பற்றி பேசுகிறீர்கள்?
கல்யாணசுந்தரம் (பாஜக): நீங்கள்தான் தமிழகம் பற்றி பேசினீர்கள். மும்மொழியை பற்றிப் பேசினீர்கள்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: புதுவையில் எத்தனை மொழிகள் உள்ளது என தெரியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: இருமொழி கொள்கைதான் வேண்டும். தமிழை எதிர்க்கிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தது எப்போது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தது. இந்தியை திணித்ததும் காங்கிரஸ்தான். அவர்களோடுதான் கூட்டணியில் உள்ளீர்கள். இதையடுத்து அமைச்சர் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் பேசினர். இதனால் சட்டப்பேரவையில் கடும் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. பேரவைத்தலைவர் சபையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: புதுவையில் இருமொழி, மும்மொழி கொள்கை இல்லை, நாலு மொழி கொள்கை உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 4 மொழி உள்ளது.
செந்தில்குமார் (திமுக): இது 22 மொழிகள் கொண்ட தேசம்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: புதுவையில் 4 மொழி அலுவல் மொழியாக உள்ளது.
வைத்தியநாதன் (காங்கிரஸ்): இந்திமொழி தேவை என்கிறீர்களா? மும்மொழி கொள்கையில் அரசின் முடிவு என்ன? என தெளிவுபடுத்துங்கள்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: காங்கிரஸ் ஆட்சியில்தான் மொழிப் போர் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம்: இந்திமொழிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் எப்படி வந்தது? அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசு எது? உங்கள் கட்சி தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுங்கள். புதுவை அரசின் கொள்கை மும்மொழி கொள்கைதான். வைத்தியநாதன் காங்கிரஸ் : இதை முதலமைச்சர் ஏற்கிறாரா?
அமைச்சர் நமச்சிவாயம்: முதல்வர், ஆளுநர் ஏற்றதால்தான் மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் புதுவையில் மும்மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அமைச்சரின் அராஜக பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறினார். அவருடன் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...