Published : 13 Mar 2025 06:17 AM
Last Updated : 13 Mar 2025 06:17 AM
சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பெண்கள், தமிழக அரசின் ‘தோழி விடுதி’களில் தங்கி பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் பெண்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டில் ‘தோழி விடுதிகள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதியின் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சார்பில் சென்னை அடையாறில் ‘தோழி விடுதி’ அமைக்கப்பட்டது. இதில், 98 படுக்கைகள், 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு, இலவச இணைய சேவை, காற்றோட்டமான அறைகள், சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
மாத வாடகையாக ரூ.4,200 முதல் ரூ.6,850 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ‘தோழி விடுதி’யில் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் தங்க விரும்பும் பெண்கள், https://www.tnwwhcl.in/ என்ற இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499988009, 9445724179 என்ற செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையைப் போலவே கோவை, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ‘தோழி விடுதிகள்’ செயல்பட்டு வருகின்றன. மேலும், காஞ்சிபுரம், கரூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் உள்பட 9 நகரங்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment