Published : 13 Mar 2025 06:23 AM
Last Updated : 13 Mar 2025 06:23 AM
சென்னை: ‘‘2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் உள்ளது’’ என, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2023-24 ம் நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.
அஞ்சலக சேமிப்பு வங்கி, விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்), பார்சல் சேவைகள், சர்வதேச அஞ்சல்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு, பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பரிவர்த்தனைகள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 126 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மரியம்மா தாமஸ் பேசியதாவது: 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் இருந்தது. இந்த நிதியாண்டில் இவ்வட்டம் ரூ.1,316.80 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்ததோடு அனைத்து அஞ்சல் வட்டங்களிடையே 2-வது இடத்தை பெற்றது.
இந்த வருவாயில் ரூ.720.39 கோடி நிதிச் சேவைகள் மூலம் ஈட்டப்பட்டது. ரூ.596.41 கோடி அஞ்சல் துறை செயல்பாடுகள் மூலம் ஈட்டப்பட்டது.
இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மூலம், 2023-24-ம் நிதியாண்டில் 31.79 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,384 கோடி மதிப்பிலான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி செய்வதற்காக 66 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அஞ்சல் ஆதார் சேவை மையம் மூலம், 33.59 லட்சம் பேருக்கு புதிதாக ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மரியம்மா தாமஸ் தெரிவித்தார்.
விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், அஞ்சல் சேவை இயக்குனர் மேஜர் மனோஜ், பொது மேலாளர் (அஞ்சல் கணக்கு மற்றும் நிதி) சித்ரஞ்சன் பிரதான், தெற்கு வட்ட அஞ்சல் துறை தலைவர் வி.எஸ்.ஜெய்சங்கர், மேற்கு வட்ட அஞ்சல் துறை தலைவர் ஏ.சரவணன், அஞ்சல் சேவைகள் இயக்குனர் (தலைமையகம்) கே.ஏ.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment