Published : 13 Mar 2025 05:41 AM
Last Updated : 13 Mar 2025 05:41 AM
சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை திமுக குழுவினர் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர்.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், 58 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்கவும், போராட்டத்தை முன்னெடுக்கவும் தென்மாநிலங்களின் எம்.பி.க்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைப்பது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதையடுத்து திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களின் கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது முதல்வர் பேசும்போது, “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசுக்கு எதிராக திமுக எம்.பி.க்கள், அனைத்து கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார்.
அதன்படி, திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் கொண்ட குழு ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து அதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது சென்னையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்துக்கு அழைக்கும் முதல்வரின் கடிதத்தையும் வழங்கினர்.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் கொண்ட குழு ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ் ஆகியோரை சந்தித்து சென்னையில் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து, முதல்வரின் கடிதத்தை வழங்கினர்.
இதனிடையே அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் கொண்ட குழு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்குச் சென்று அம்மாநில முதல்வர் சித்தராமையாவை சந்தித்து சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைத்து அதற்கான முதல்வரின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment