Published : 12 Mar 2025 06:21 PM
Last Updated : 12 Mar 2025 06:21 PM

“மொழியை திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில்  நடந்த  சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூதாட்டியிடம் மனுவைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார் |  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “மொழியைத் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (மார்ச் 12) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 656 மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது: “ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்ப்பதுதான் அரசின் முக்கிய கடமை. அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. முழுமையாக தோல்வி அடைந்த மும்மொழி கொள்கை மாடலை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. வெற்றி அடைந்த நமது மாடலை எடுத்துவிட்டு தோல்வியடைந்த மாடலை பின்பற்றச் சொன்னால் என்ன அர்த்தம்?. அறிவுள்ளவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா?

மும்மொழிக் கொள்கை முதன்முதலில் 1968-ல் சட்டமாக அமல்படுத்தப்பட்டது முதல் இன்று வரை 57 வருடங்களாகியும் எந்த மாநிலங்களிலும் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழகம், தேசிய சராசரியை விட சிறப்பான நிலையை அடைந்துள்ளது. நமக்கு தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்றார் அண்ணா. உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழியே தேவைப்படாது.

2-வது மொழியை ஒழுங்காக கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மொழியைத் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. 2-வது மொழியை கற்றுத்தர முடியாதவர்கள், 3-வது மொழியை படிக்கச் சொன்னால் ஏற்க முடியுமா? எல்கேஜி படிப்பவர்கள் முனைவர் பட்டம் படிப்பவர்களிடம் வந்து இப்படி படியுங்கள் எனச் சொல்வது போல இருப்பதாக, தமிழக முதல்வர் குறிப்பிட்டவாறு மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது,” என்றார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், கோட்டாட்சியர் சாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா, மண்டலத் தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x