Published : 12 Mar 2025 03:01 PM
Last Updated : 12 Mar 2025 03:01 PM

திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற இந்து முன்னணி கோரிக்கை

காடேஸ்வரா சி.சுப்ரமணியம் | கோப்புப்படம்

சென்னை: “திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என்றும், ஓய்வு பெற்றபின் ஆளுநர் பதவியை எதிர்பார்த்து தீர்ப்பு வழங்கினார் என்ற பழி சுமத்தி கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் குடியரசு தலைவர் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 9-ம் தேதி மதுரையில் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. அதில் பேசிய பலரும் மதக் கலவரத்தை தூண்டும் விதத்திலும் சட்ட விரோதமாகவும் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் எம்.பி‌. சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்து அதாவது அவர் ஆளுநர் பதவி கிடைக்கும் என்பதற்காக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்ற வகையில் அநாகரிகமாக பேசியுள்ளார்.

நீதிபதியின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் இதே எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் தமிழர் வரலாற்றை பெருமைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியின் பதவியேற்பு சமயத்தில் ஆதீனங்கள் செங்கோல் வழங்கிய போது தமிழ் மன்னர்களை இழிவுப்படுத்தினார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக எம்.எல்.ஏ. அப்துல் சமது கூறினார். முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் மலை முஸ்லிம்களின் சொத்து வக்பு வாரியத்துக்கு சொந்தம் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறினார்.

இவை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பது தெரிந்தும் தமிழக அரசும், திருப்பரங்குன்றம் மலை கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும், எம்.பி. வெங்கடேசனும் வாயை திறக்கவில்லை. முஸ்லிம் அமைப்பினர் புனிதமான மலைமீது அசைவ உணவை எடுத்து சென்று சாப்பிட்டனர். அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அப்போதும் காவல்துறை அரசு நிர்வாகம் அவர்களுக்கு அனுசரித்து போனது.

இந்நிலையில் முருக பக்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி கோயிலை காக்க இந்து முன்னணி சார்பில் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை காவல்துறை நிராகரித்தது. அரசு நிர்வாகம் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை போட்டது. ஆனால் அதே அரசு நிர்வாகம் மார்ச் 3-ம் தேதி திமுக ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தது. இவற்றை கவனத்தில் கொண்டே நீதிமன்றம் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு மதுரையில் அனுமதி அளித்தது.

நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என்றும், ஓய்வு பெற்றபின் ஆளுனர் பதவியை எதிர்பார்த்து தீர்ப்பு வழங்கினார் என்ற பழி சுமத்தி கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இவரது நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமான செயல். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் குடியரசு தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மீதான வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரின் கருத்துக்கள் நீதிபதிகளை, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இந்த வழக்கு நடந்தால் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது என சந்தேகிக்கிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல திருப்பரங்குன்றம் விஷயத்தை திட்டமிட்டு பிரச்சினையாக உருவாக்கியது யார்? இந்த சதிக்கு பின்னணி என்ன என்பதை சிபிஐ அல்லது மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x