Published : 11 Mar 2025 03:55 PM
Last Updated : 11 Mar 2025 03:55 PM

கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ராமேசுவரம்: கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்திய-இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளுவதற்காக யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவிற்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல, 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகளும், 36 பெண் குழந்தைகளும் என மொத்தம் 3,464 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர். மேலும், இலங்கையிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவில் இரு பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மின்சார விளக்கு, படகுத்துறை, தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் முன்னிலையில், இலங்கை கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமேசுவரத்திலிருந்து 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில் செல்வதற்கு அனுமதிக் கோரப்பட்டிருந்தது.இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்காக பயன்படுத்தப்படவுள்ள படகுககளை மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் மீன்பிடி இறங்குதளத்தில் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் உரிமம் , காப்பீடு, படகுளின் நீளம், படகுகளின் இயந்திரங்கள் திறன், பயணம் செய்ய ஏதுவான அம்சங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சி நிரல்: மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது. மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா முடிவடையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x